12 Dec மராம்பு விமர்சனம் -2
நன்றி Mani Meenakshi Sundaram .
நூலின் பெயர் : மராம்பு
நூலாசிரியர் : நசீமா ரசாக்
முதல் பதிப்பு : ஆகஸ்டு’2022
பக்கங்களின் எண்ணிக்கை : 102
விலை: ரூபாய்.130
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,
சென்னை – 600042
சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் ‘மராம்பு’
என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல்.
இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடன் ஒப்பீடு செய்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த, துபாயில் வசிக்கும் எழுத்தாளர் நசீமா ரசாக் கின் இரண்டாவது குறுநாவல் இந்நூலாகும்.
இந்நூல் எளிய முறையில் கதை நகர்த்தும் குறுநாவலாக இருந்தாலும்,
நான்கு பெண்களைச் சுற்றிச் சுழலும் சிறுநூலாக இருந்தாலும் ,தம் குடும்ப வறுமை போக்க அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் பெண்களின்
துயர வாழ்வை மிகச் சிறப்பாகவே முன்னிறுத்துகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட மாட்டோமா,நம் குடும்பமும் ஊரில் நாலுபேர் மதிக்கும்படி இருந்துவிடாதா என்ற நப்பாசையில் இங்கிருந்து யாராவது ஒருவர் தினமும் அரபு நாட்டுக்குப் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறார்.ஆண்களே இதில் அதிகம் என்றாலும் வீட்டு வேலையாளாகவும் செவிலியராகவும் பெண்களும் செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படி விமானம் ஏறிய வள்ளியையும்,அவள் துபாயில் சந்திக்கும் மூன்று பெண்களையும் பற்றியே இந்நாவல் பேசுகிறது.அவர்களின் நிச்சயமற்ற வாழ்விலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும் தோழமையாகவும் இருப்பதைக் காட்டி படிப்பவரை நெக்குருகச் செய்யும் நாவல் , அவர்கள் ஒவ்வொருக்குமான
தனித்தனிப் பிரச்சினைகளைக் கூறுவதில் கடைசிவரை படிப்பவரைப் பதற்றத்துடனேயே வைத்திருக்கிறது.
பொதுவாகப் பெண்கள் தம்முடைய பிரச்சினைகள் என்று கருதுபவை எல்லாமே அவர்களுடைய குடும்பத்தின் பிரச்சினைகளையே.
கதையில் வரும் நான்கு பெண்களும் குடும்பத்தில் உள்ள ஆண்களால் கைவிடப்பட்டவர்களாக இருந்தும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்ற உறுதியைக் கைவிடாதவர்களாக இருக்கின்றனர்.பெரும்பான்மையான பெண்களின் இப்பொதுப் பண்பே குடும்பம் என்னும் அமைப்பை அழியவிடாமல் காத்து நிற்கிறது.
சமூகம் என்னும் பெரிய அமைப்பின் ஆணிவேரான குடும்பத்தைத் தம் தோளில் தூக்கிச் சுமக்கும் ஒப்பீடற்ற இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்வை, அரபு நாட்டுச் சூழலில் நான்கு பெண்களுடன் பேசிப் பார்த்திருக்கிறது இந்நாவல்.
-மணி மீனாட்சி சுந்தரம்.
Sorry, the comment form is closed at this time.