தங்கப் பதக்கம்
பல வருடங்களுக்குப் பின் இதை மீண்டும் கையில் எடுத்தேன். கிரெசண்ட் கல்லூரியில் எம்.சி.ஏ முடிக்கும் இறுதி ஆண்டு சிறந்த ப்ரோஜெக்ட்காக முதல் இடம் கிடைத்தது. அதற்கு விழா வைத்துத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். முதல் ரேங் எடுக்கும் மாணவி அல்ல நான். ஆனால் முயற்சிகளுக்கு என்றும் முற்றுப் புள்ளி வைத்ததில்லை. ஐந்தாவது செமெஸ்டரில் ஐ.டி.சி பேப்பரில் அரியர் வந்துவிட்டது. அதுவரை நோ ஹிஸ்ட்ரி ஆப் அரியர்ஸ் என்ற சிறப்புக்குக் கீழ் என் பெயரும் இருந்து வந்தது. அரியரால் பல சிறந்த நிறுவனங்களின் ப்ளேஸ்மெண்டை தவற விட்டேன். ஒவ்வொரு நாளும் என் ஆசிரியர் ஆன்ஜலினா என்னை அழைத்து சமாதானப் படுத்துவார். என்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நாலா பக்கமும் நண்பர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். எதுவும் என்னை லேசாக்கவில்லை. ஒவ்வொரு இரவும் துபாயிலிருக்கும் அப்பாவிடம் இருந்து போன் வரும். அப்பா குரலைக் கேட்டவுடன்...