
04 Oct ஹாருக்கி முராகாமி
டோக்கியோ நகரிலிருந்த அந்த ஜேஜ் பாரில் பலர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே ஜேஜ் இசைக்கு ஆடிக் கொண்டும் இருந்தார்கள். மூத்திர வாடையோ வாந்தியோ அங்கு இருக்கவில்லை. கூட்டம் கூடிக் கொண்டிருந்த பாரில் அந்த இளைஞன் பரபரப்பாக இருந்தான்.
வந்தவர்களுக்கு காக்டெயில் செய்துக் கொண்டும் சைடிஷ்ஷை வைத்துக் கொண்டும் இருந்தான். நடுநடுவே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது அவன் கவனமும் இருந்தது. வாடிக்கையாளர்கள் மட்டையானால் பாதகமில்லை. பணியாட்கள் ஆனால் பேஜாராகிவிடும் என்ற நல்ல நோக்கமே அவன் கவனத்துக்குக் காரணம். வந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்து உருண்டு செல்ல விடிந்துவிடும்.
பாரை மூடிவிட்டு நேராக அடுக்களையில் இருக்கும் அடுப்பு மேடையில் காகிதத்தை வைத்து எதையோ கிறுக்க ஆரம்பித்தான். அவன் அப்படி மாறியதற்குக் காரணம் சில நாள்கள் முன் அவன் ரசித்துப் பார்த்த பேஸ் பால் ஆட்டத்திற்குப் பின்பு தான். அப்பொழுதிலிருந்து அவன் மனம் எழுத்தை மட்டுமே தியானித்தது.
விளைவு கிறுக்கிய பக்கங்கள் எல்லாம் சேர்த்து இரண்டு நாவல்களாக வெளிவந்தன. இரவில் குடிகாரர்களுக்கு ஊற்றிக் கொடுத்துவிட்டு, விடியற்காலை பாரை மூடிய பின் எழுத உட்கார சிரமமாக இருந்தது. ஆனால் எப்படியாவது எழுத வேண்டும். அதற்கு ஒரே வழி பாரை மூட வேண்டும். பாருக்கு ஆள் போட்டுக் கொண்டு எழுது என்று நண்பர்கள் சொன்ன அறிவுரையெல்லாம் அர்த்தமற்றுப் போனது.
தன் மனைவியிடம், “ யோக்கோ, இரண்டு வருடங்கள், அதில் ஒரு நாள் குறையாமல் நான் எழுத மட்டுமே வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வேலை எழுத்து எனக்கில்லை என்று தெரிந்தால், நாம் எங்கு வேண்டுமென்றாலும் மீண்டும் பாரை நடத்தலாம். அப்படி ஆகாது என்றுதான் இப்பொழுது தோன்றுகிறது. இதற்கிடையில் கணவனாக என் பொறுப்புகளைச் செய்வேனா என்று எல்லாம் எனக்குத் தெரியாது. நாளை உனக்கும் எனக்கும் பிள்ளை வேண்டுமா என்று யோசிக்கக் கூட முடியவில்லை. என்னுடன் நீ மட்டும் இருந்தால் சாதித்து விடுவேன்.ஆனால்… என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை சில நொடிகளுக்குப் பின் பார்த்தான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த யோக்கோ, கண்களை மூடிக் கொண்டு சரி என்று தலையசைத்தாள். பார் விற்ற பணம் கணிசமாகக் கையிலிருந்தது. அதை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த நராஷினோ என்ற ஊருக்குக் குடி சென்றார்கள். அப்பொழுது அந்த இடம் இன்று போல் நகரமாக இல்லை. டோக்கியோவைப் பார்க்கும் போது, அது அமைதியாக இருந்தது. முக்கியமாக அதிகமான நண்பர்கள் உறவினர்கள் என்று எந்த அக்குத்தொக்கும் இல்லை. எழுதுவதற்கு இதைவிட வேறு என்ன சொகுசு வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அவன் உயரத்தைவிட, எழுதும் பக்கங்கள் கூடிக் கொண்டு சென்றன. அவன் தொப்பையும் போட்டி போட்டிக் கொண்டி பெருத்தது. அறையைச் சுத்தம் செய்ய வரும் யோக்கோவிற்க்கு அவன் வயிறும் சாம்பல் குவியலின் அளவும் ஒன்று போல் தெரிந்தது. ஒரு நாள் மெனக்கெட்டு அவன் புகைத்துப் போட்ட சிகெரெட் துண்டுகளை எண்ண ஆரம்பித்தாள். சரியாக அறுபது இருந்தது.
“நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டும். நீ எதற்காக அனைத்தையும் தூக்கிப் போட்டாயோ அதற்காக உடம்பைப் பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டு குப்பை முரத்துடன் வெளியேறினாள். ஒரு சொல், ஒரு நிமிடம் போதும் மாற்றங்கள் நிகழ. அவனுக்கு நடந்தது.
இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறக்கம்.மறுநாள் நான்கு மணிக்கு விழிப்பு. எழுந்தவுடன் எழுதுவது மட்டுமே. தொடர்ந்து ஆறு மணி நேரம். மதியம் ஓட்டம். உடல் வலுவானது. சிகெரெட் பிடிப்பது நின்று போனது.தொடர் ஓட்டத்தால் சில மாரத்தான்களில் கலந்து கொண்டான். பதக்கங்களை வாங்க அல்ல. தொடர்ந்து எழுத ஓட்டம் தேவையாகிப் போனது. சில நாள் ஓட்டம். சில நாள் நீச்சல்.
வாழக்கையில் எந்த இலக்கை நோக்கி நகர்ந்தாலும் சின்ன சின்ன ஒழுங்கும் தொடர்ந்து இயங்குவதும் பெரிய வெற்றியைத் தரும்.
ஜேஜ் பாரை நடத்திக் கொண்டிருந்த அந்த இளைஞன் பின்னாளில் உலகம் கொண்டாடும் எழுத்தாளன் ஆனார். அவர் புத்தகங்கள் பல மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அவர் தான் ஹாருக்கி முராகாமி.
Bala A
Posted at 02:18h, 05 OctoberNice article Naseema.