
13 Oct ஜெஃப்ரி ஆர்ச்சர்
எண்பத்தி மூன்று வயதாகும் அந்த முதியவருக்காக இன்றும் வாசகன் காத்துக் கொண்டிருக்கிறான். அவர் பிறக்கும் போது தந்தை இழப்பு. தாய் லண்டனில் இருக்கும் வெஸ்டன் நகரின் லோக்கல் செய்தித்தாளில் வாராந்திர பத்தி எழுத்தாளர்.
இலக்கியம், வரலாறு பாடங்களில் சிறந்து விளங்கிய அந்த இளைஞன் இராணுவம், காவல்துறை, ஆசிரியர் என்று கிடைத்த வேலை எதையும் விடவில்லை.
1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் விளையாட்டுத் துறையில் சி̀றந்து விளங்கினார். ஆக்ஸ்பார்ட் அவரை அதெலெட் க்ளபின் பிரெஸிடெண்ட் என்ற பதவி கொடுத்து மூன்று வருடம் அங்கே இருக்க வைத்தது.
அதற்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி திரட்டுபவராக வேலை செய்தார். அரசியல் ஆர்வம் வந்தது. உள்ளூர் கவுன்சிலர் என்று ஆரம்பித்து அவரது இருபத்தி ஒன்பதாம் வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
எல்லாம் அப்படியே சரியாகப் போயிருக்க வேண்டும். கட்டம் கலைய ஆரம்பித்தது. 1974-ஆம் ஆண்டு திவாலானார். தன்னுடைய அனுபவங்களை நாவலாக எழுதினார். முதல் நாவல் வெளிவந்த நாளிலிருந்து பல லட்சம் பிரதிகள் விற்றன.
ஒரு பக்கம் அரசியல் மறு பக்கம் எழுத்தார்வம். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவரால் எல்லாம் சாத்தியமானது.
அவர் மீது தொடர்ந்து பல வழக்குகள் தொடரப்பட்டன. ஊழல், பாலியல் வன்முறை, போலிச் சான்றுகள் சமர்ப்பித்த வழக்கு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அப்பொழுதும் எழுதுவது நின்றபாடில்லை. தொடர்ந்து பல நாவல்கள், சிறுவர் புத்தகம் என்று வெளிவந்து கொண்டிருந்தன.
ஆரம்பத்தில் இரு வருடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தது. பின்பு ஒரு வருடத்தில் ஒரு புத்தகம். அவர் எழுத ஆரம்பித்ததும் நேர நிர்வாகம் எல்லாம் சரியான கோட்டில் வந்து சேரும். எழுதும் போது அலைபேசி, பாட்டு, மக்கள் என்று யாருக்கும் எதற்கும் அனுமதி இல்லை.
காலை ஐந்தரை மணிக்கு நாள் ஆரம்பிக்கும். ஆறு மணிக்கு எழுத உட்கார்ந்து விடுவார். காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை. வியப்பாக இருகிறாதல்லவா? அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.
காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரை எழுதுவார். பின்பு இரண்டு மணி நேரத்தில் காலை உணவு, செய்தித் தாள் வாசிப்பு, கிரிக்கெட் நடந்தால் ஸ்கோர் பார்ப்பார். எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் காலை பத்து மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை எழுதுவார். இரண்டு மணி நேரம் முடிந்து விட்டதா? ஒரு ப்ரேக். மதிய உணவுக்கு முன் ஜிம் அல்லது நடைப்பயிற்சி. சாப்பிட்டுவிட்டு உறங்கும் பழக்கமில்லை. மதியம் இரண்டு மணி முதல் நான்கு வரை எழுத்து வேலை. அதற்குப் பின் சில சமயம், பாட்டு, டிவி என்று சிறிது நேரம் ஓய்வு. மாலை ஆறு மணி முதல் எட்டு வரை எழுத்தின் கடைசி பாகம். முடித்துவிட்டு இரவு உணவு, மற்ற வேலை. சரியாக இரவு பத்து மணிக்கு உறக்கம். நானும் சுலபமாக எழுதிவிட்டேன். நீங்களும் படித்துவிட்டீர்கள். இதற்குப் பின் இருக்கும் மன திடம், ஆர்வம் எல்லாம் வந்துவிட்டால் சராசரி மனிதன் அவரைப் போல் மாஸ்டர் ஆகிடுவான்.
அவர் மீது இருக்கும் வழக்குகளை விசாரித்து அவரை 2001-ஆம் ஆண்டு சிறையில் அடைத்தனர். ஓரிரு நாள்கள் இல்லை. நான்கு வருடங்கள். நான்கு வருடச் சிறை பின்னர் இரண்டு வருடங்கள் என்று குறைக்கப்பட்டது. அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆனால் எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருந்தான்.
சிறை நாட்குறிப்பு என்று வெவ்வேறு சிறையிலிருந்த அனுபவங்களை எழுதினார். அது மூன்று தொகுப்புகளாக வெளிவந்தன. அவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். புத்தகங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் பல மில்லியன் பிரதிகள் விற்றுக் கொண்டிருக்கின்றன.
செப்டெம்பர் இருபத்தி மூன்றாம் தேதி புதிய திரில்லர் நாவல் வெளிவந்தது. முன்பதிவு சக்கை போடு போட்டது. அவர் தான் உலகம் அறிந்த ஆங்கில நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர்.
Sorry, the comment form is closed at this time.