காஜு இஷிகுரோ - Naseema Razak
15971
post-template-default,single,single-post,postid-15971,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

காஜு இஷிகுரோ

வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடப்பெரிய தகுதியாகப் பொறுமை இருக்க வேண்டும். இதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சிலர் வாழ்க்கையில் எடுத்த எடுப்பில் வெற்றி கிடைத்துவிடும். கிடைத்த வெற்றியைத் தக்க வைப்பது என்பது வெற்றிபெற உழைப்பதை விடப் பெரிய வேலை.

காஜு இஷிகுரோ என்ற ஜப்பான் இளைஞர் தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் முதல் நாவலை வெளியிடுகிறார். அந்த நாவலும் வாசகரிடத்தில் கவனம் பெறுகிறது. அடுத்தடுத்து அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. இவையனைத்தும் பகுதி நேரத்தில் எழுதி முடித்தவை. அவரது இரண்டாவது நாவல் 1983-ஆம் ஆண்டு புக்கர்விருதைப் பெறுகிறது.

இரண்டாவது புத்தகத்தில் புக்கர் எல்லாம் சாதாரண வெற்றி இல்லை. இலக்கிய உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் இஷிகுரோவுடைய நேரம் தேவைப்படும் என்று அவர் நினைக்கவில்லை. விருது கிடைத்தவுடன் விழாக்களுக்கு விருந்தினராகப் போவது எல்லாம் அந்த நேரத்தில் நிகழும் சடங்கு. ஆனால் அந்தச் சடங்கு இஷிகுரோவாழ்க்கையில் ஒரு வருடம் நீடித்தது. மக்கள் அவருக்காகப் பாராட்டு விழா எடுப்பதும், விருந்துக்கு அழைப்பதும்,மேடையில் விருந்தினராக கெளரவிப்பது என்று அவர் நேரம் அவர் கையில் இருக்கவில்லை. தொடர்ந்து வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்குப் பதில் கொடுத்துக் கொண்டும் இருந்தார்.

புக்கர்  விருது பெற்ற அந்த நாவல் படமாக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு அந்தப் படம், படத்தில் நடித்த நடிகர்கள் பரிந்துரைக்கப்பட்டார்கள்.விருது அறிவித்த சில நாள்களில் தான் எழுதப் போகும் மூன்றாவது நாவலுடைய முதல் அத்தியாயத்தை ஒரு இதழில் வெளியிட்டார். அதற்குப் பின் நடந்த களேபரத்தில் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. அதற்கான நேரம் இல்லை. சரி, எப்படியாவது எழுதலாம் என்றால் ஒரு வருடத்தில் கை விரல்கள் எல்லாம் உறைந்து போனது.எழுத்தாளனுக்குச் சாவை விடப் பயங்கரமானது வார்த்தைகள் வராமல் தடைப்பட்டுப் போவது. அவருக்காக இரண்டு மேஜைகள் இருந்தன. ஒன்றில் கணினி, மற்றொன்றில் காகிதங்களும் பேனாக்களும் குவிந்திருந்தன. எங்குப் போய் உட்கார்ந்தாலும் எழுத வரவில்லை. புக்கர் விருது பெற்றவர் உறைந்து போனாரா இல்லை இறந்து போனாரா என்றெல்லாம் தெரியவில்லை. இதை தன் வாழ்நாளில் வந்த விபத்துக்(Crash) காலம் என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மீண்டும் எழுத முடிவு செய்தார். மெல்ல மெல்லத் தோன்றியதெல்லாம் எழுத ஆரம்பித்தார். தத்தி தவழ்ந்து நடக்க ஆரம்பிக்கும் குழந்தை போல் வார்த்தைகள் வர ஆரம்பித்தன.

எழுத்தாளனுக்கு மிக முக்கியம் தனக்கான நேரம். தனிமை என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதெல்லாம் இல்லாமல் நேரம் கிடைக்கும் போது, தோன்றும் போது எழுதுவதெல்லாம் பொழுதுபோக்கு. இந்த ஞானம் அவருக்கு வந்தது.எல்லாவற்றிலும் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடிவு செய்தார். அவரும் அவருடைய மனைவி லோரோவும் நேரத்துடன் மிக கராராக இருக்க ஆரம்பித்தார்கள். நேரத்தோடு மட்டுமில்லை விருந்து, பயணம் என்று அனைத்தையும் வேண்டாத பட்டியலில் சேர்த்தார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் உள்பட அனைத்தும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டது.

வாரத்தில் ஆறு நாள் இஷிகுரோ எழுத ஆரம்பித்தார். காலை ஒன்பது மணிக்கு உட்கார்ந்தால் இரவு பத்தரைக்குபடுக்கை. பன்னிரண்டு மணிநேரம் எழுத்து மட்டுமே. சாப்பிட, முதுகைச் சொறிய, சோம்பலை  முறித்துக் கொள்ள மட்டுமே நாற்காலியிலிருந்து நகர்ந்தார். நடுவில் தொலபேசி அலறுவதெல்லாம் அவர் காதுகளுக்குக் கேட்கவே கேட்காது. அந்த நாவலை முடிக்கும் வரை நேரத்தோடு தவ வாழ்க்கைதான்.

எழுத்தாளரைக் கைப்பிடித்த காரணத்திற்கு லோரோவும் எல்லாவற்றிலும் துணை நின்றார். எல்லா எழுத்தாளருக்குக்கிடைக்காத வரம் லோரோ என்று அவருக்குத் தெரியும். ஆகையால் ஞாயிறு மட்டும் குடும்பத்துக்கானது. அந்த ஒரு நாள் குடும்பத்துக்குக் கொடுத்தால்தான் மற்ற ஆறு நாளும் பரவசமாக வேலை செய்ய முடியும் என்ற ரகசியம் அவருக்குத் தெரிந்திருந்தது. தொடர்ந்து எழுதினார். இன்று வரை எழுத்தில் அந்த விபத்து காலத்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்.

ஒரு முறை வெற்றியின் சூட்சம் தெரிந்து விட்டால், எத்தனை முறை வேண்டுமென்றாலும் வெற்றி பெறலாம். அதற்குச்சாட்சியாக 2017-ஆம் ஆண்டு நோபல் விருதை வென்றார்.

No Comments

Sorry, the comment form is closed at this time.