29 Nov தங்கப் பதக்கம்
பல வருடங்களுக்குப் பின் இதை மீண்டும் கையில் எடுத்தேன். கிரெசண்ட் கல்லூரியில் எம்.சி.ஏ முடிக்கும் இறுதி ஆண்டு சிறந்த ப்ரோஜெக்ட்காக முதல் இடம் கிடைத்தது.
அதற்கு விழா வைத்துத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். முதல் ரேங் எடுக்கும் மாணவி அல்ல நான். ஆனால் முயற்சிகளுக்கு என்றும் முற்றுப் புள்ளி வைத்ததில்லை.
ஐந்தாவது செமெஸ்டரில் ஐ.டி.சி பேப்பரில் அரியர் வந்துவிட்டது. அதுவரை நோ ஹிஸ்ட்ரி ஆப் அரியர்ஸ் என்ற சிறப்புக்குக் கீழ் என் பெயரும் இருந்து வந்தது. அரியரால் பல சிறந்த நிறுவனங்களின் ப்ளேஸ்மெண்டை தவற விட்டேன்.
ஒவ்வொரு நாளும் என் ஆசிரியர் ஆன்ஜலினா என்னை அழைத்து சமாதானப் படுத்துவார். என்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நாலா பக்கமும் நண்பர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். எதுவும் என்னை லேசாக்கவில்லை.
ஒவ்வொரு இரவும் துபாயிலிருக்கும் அப்பாவிடம் இருந்து போன் வரும். அப்பா குரலைக் கேட்டவுடன் வெடித்து அழுது விடுவேன். காரணம் “எதற்கு அவளை மேலும் மேலும் படிக்க வைக்கிறாய்?” என்ற இரைச்சலுக்கு நடுவில் தான் அவர் என்னை படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவரை நான் ஏமாற்றிவிட்டேன் என்ற எண்ணம் என்னை உண்டு இல்லை என்றாக்கியது.
என் ஆசிரியர் எனக்காக ரீ வேலுவேஷனுக்கு விண்ணப்பித்தார். இரண்டு மாதம் எதையோ பறிகொடுத்தது போல் கல்லூரிக்குச் சென்று வந்தேன். இன்று நினைத்தால் ஒரு அரியருக்கா இத்தனை அலம்பல் செய்து இருக்கிறேன் என்று சிரித்துக் கொள்கிறேன். அன்று அது மிகப் பெரிய விஷயம்.
எதிர்பார்க்காத நேரத்தில் ரீ வேலுவேஷன் மதிப்பெண் வந்தது. எண்பத்தைந்து சதவீதம் எடுத்து பாஸ் செய்து இருந்தேன். இரண்டு மாதமாகப் பட்ட வலி எல்லாம் பறந்து போனது.
இறுதி செமெஸ்ட்டர் ப்ராஜெக்ட் வந்தது. ஆறு மாதம் அலுவலகம் சென்று செய்ய வேண்டும். கூட்டு வேலை இல்லை. தனியாகச் செய்தேன். அந்த ப்ரோஜெக்ட்டுக்காக கிடைத்தது தான் அந்தப் பதக்கம்.
அன்றிலிருந்து இன்று வரை நண்பர்களிடம் முக்கியமாக உறவுக்காரர்களிடம் அப்பா பேசும் போது இந்தப் பதக்கத்தைப் பற்றி மறப்பதே இல்லை.
“இன்னும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கு பா “என்று பல வருடங்களாகச் சொல்லி வருகிறேன். அதை அவர் கேட்டது இல்லை. அவர் அப்படிச் சொல்லும் இடங்களிலிருந்து நான் நழுவி விடுவது வழக்கம்.
பதக்கம் என் வெற்றிக்கான அடையாளம் இல்லை. அது என் அப்பாவின் வெற்றி.
Sorry, the comment form is closed at this time.