Skip to content
Blog

ஜார்ஜியாவில் மதர் மேரி

July 5, 20250 second read

ஆறு வருடங்களுக்கு முன் ஜார்ஜியவிற்குச் சென்றிருந்த போது நடந்த நிகழ்வு. இன்று தூசி தட்டும் போது, கையில் கிடைத்த படம் அதை ஞாபகப் படுத்தியது.

முதலில் இறங்கியது அதன் தலை நகரமான திப்லிசியில். தலை நகரம் இரண்டாகப் பிரிந்திருந்தது. ஓல்ட் டவுன் .நியூ டவுன். நியூ டவுன் மால்கள்,கடைகள்,மக்கள் கூட்டம் என்று உப்பிக் கொண்டிருந்தது. ஓல்ட் டவுன் சிறிது வித்தியாசமாக இருந்தது. பெட்டிக் கடையானாலும், சூப்பர் மார்க்கெட் என்று எதுவானாலும் பாதாளத் தளத்தில் இருந்தன. எல்லாக் கட்டங்களிலும் பாதாளத் தளம் இருந்தது. ரஷ்யா ஜார்ஜியா மீது போர் தொடுத்த போது பாதுகாப்புக்காகப் பதுங்கிக் கொள்ள அப்படி ஓர் ஏற்பாடு நடந்திருக்கிறது.

அந்த நகரின் பழமையான கோட்டைக்குச் சென்றோம். அதன் பெயர் நரிகளா கோட்டை(Narikala Fort). நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தக் கோட்டையை வரலாறு முழுக்க பலரும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

கோட்டையைப் பார்க்க, மலை மேல் ஏறுவது போல் இருந்தது. அதிகமான மக்கள் இல்லை. சுற்றுலாவாசிகள் சிலர் இருந்தார்கள். மேலே ஏறும் போது காய்ந்து போன ஆப்பிள் போல் ஓர் எண்பது அல்லது தொண்ணூறு
வயது பாட்டி கண்ணில் பட்டார். கருப்பு அங்கி அணிந்திருந்தார். சுருங்கிய தோல்களுக்கு நடுவில் நீல நிறக் கண்கள் மின்னின. அவர் ஜார்ஜியாவாசி என்று தெரிந்தது. கையில் ஒரு பை இருந்தது. அவரை பார்த்துக் கொண்டே மேலே ஏறிவிட்டேன்.

திப்லிசி முழுக்க ஓவியம் போல் தெரிந்தது. குரா ஆறும்(Kura) கோடு போல் அழகாக இருந்தது. சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு மீண்டும் கீழே இறங்கினோம்.

அந்தப் பாட்டி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை கடந்து வர என்னால் முடியவில்லை. நேராகச் சென்று அவர் முன் நின்று புன்னகைத்தேன். ” உங்களை ஒரு முறை அணைத்துக் கொள்ளட்டுமா ? என்று சைகையில் கேட்டேன். அவர் பல்லில்லாத அந்தப் பொக்கை வாய் மலர்ந்தது. மெதுவாக மென்மையாக அவரை அணைத்துக் கொண்டேன்.

பையிலிருந்து எதையோ எடுத்தார்.
மதர் மேரி படம். ” இதை வாங்கிக் கொள்” என்றார்.

“இல்ல வேண்டாம். இப்ப கைல காசு இல்ல” என்று கைகளை ஆட்டிச் சொன்னேன்”.

“உனக்காக இருபது லாரி ” .

நம்மூர் காசுக்கு முப்பது ரூவா. அவரை மீண்டும் அணைத்து விட்டுக் கிளம்பினேன். என் கைகளைப் பிடித்து இந்தப் படத்தைக் கொடுத்தார். மறுக்க முடியவில்லை.

ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு ரஸாக் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.

இருபது லாரியுடன் அதே இடத்திற்குச் சென்றேன், ஆனால் அவர் அங்கு இல்லை.


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading