Skip to content
Novel

டார்லிங் ஹபீபி – 2

September 22, 20250 second read

வகுப்புக்குள் நுழைந்தவுடன் குணால் திவ்யாவைத் தேடினான். அவள் எங்கும் காணவில்லை. கால்சட்டையிலிருந்து அலைப்பேசியை எடுத்து, திவ்யாவிடமிருந்து ஏதாவது குறுஞ்செய்தி வந்து இருக்கிறதா என்று பார்த்தான். ஒன்றும் வரவில்லை.

“இன்னைக்கு வரலையா? வாட்ஸப் கூட பண்ணல?” என்று யோசித்தபடி உள்ளே வந்தான். இரண்டாவது மேஜையில் மூன்று மாணவர்கள் திவ்யாவைச் சுற்றி நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த மாணவர்களுக்கும் அவனுக்கும் பல ஆண்டுகளாக எதிலும் ஒத்துப்போனது இல்லை. ஒரே வகுப்பில் இருந்தாலும் சிநேகம் கிடையாது
அந்தப் பக்கம் திரும்பாமல் அவன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். அப்போது தான் அவர்கள் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் யாரிடம் நட்பு வைத்துக் கொண்டாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். அவர்கள் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

திவ்யாவிடம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை ஒரு பக்கம் . இவர்கள் ஏன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபம் இன்னொரு பக்கம். எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன செய்வது என்று சிந்தித்தான்.

சட்டென்று, வராத இருமலை வரவழைத்து, “ஹ்க்கும்…ஹ்ஹ்க்கும்” என்று கனைத்தான். திவ்யாவைத் தவிர மற்ற மூவரும் இலேசாக அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பி திவ்யாவிடம் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

குணாலுக்கு மேலும் எரிச்சலாக வந்தது. “ஹே திவ்யா..குட் மார்னிங்” என்று உரக்கக் கத்தினான்.

“வா ப்ரோ எங்க ஆள காணோமேனு பார்த்தேன்”, என்று பேசியபடி அவன் அருகில் வந்தாள். அவள் அப்படி அவர்களை விட்டு அவனிடத்தில் வந்தது குணாலுக்கு இதமாக இருந்தது. எரிச்சலைப் போக்க அது தேவையாகவும் இருந்தது.

“குணா..என்ன அந்தப் பசங்க என்ன என்னவோ சொல்றாங்க?” என்று ஆரம்பித்தாள்.

“நீ அதையெல்லாம் நம்பறனா…நான் பேசல திவ்யா” என்று முகத்தைக் கடுகடுவென வைத்தான்.

“உனக்குக் கூட இவ்வளோ கோவமெல்லாம் வருமா என்ன? அவனுக சொல்ல வந்தானுக, ஆனா நான் நல்ல நோஸ் கட் பண்ணிட்டேன். கூல் ” என்று அவன் தோளைத் தட்டினாள். குணாலுக்கு இப்போது பத்து யானை பலம் வந்தது போலிருந்தது. அந்த மாணவர்களைத் திரும்பிப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்துவிட்டு திவ்யாவிடம் திரும்பினான்.

“திவ்யா..நீ முன்னாடி இருந்தப்ப இருந்த ஸ்கூல் இப்ப இல்ல. பார்த்து இரு. இந்தப் பசங்க எல்லாம்…” என்று அவன் முழுதாக முடிப்பதற்குள்.

“டோன்ட் வரி .ஐ கேன் ஹாண்டில். இவ்வளோ டென்சன்லாம் எடுக்காத” என்று மெல்லமாகச் சொன்னாள். அன்றைய பொழுது வெவ்வேறு பாடத்திற்கு வெவ்வேறு வகுப்புகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. உணவு இடைவேளையைத் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரப்பாகவே போய்க் கொண்டிருந்தன.

காலையில் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன், ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டுடன் திவ்யாவிடம் வந்தான். அப்போது குணால் அருகில் இல்லை. ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நின்றிருந்தான்.

“ஹே எதுக்கு சாக்லேட்? எனி திங் ஸ்பெசல்?”

“அப்கோர்ஸ், எங்களுக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடச்சு இருக்கா..அதைக் கொண்டாட வேண்டாமா ” என்று திவ்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“ஓ..இட்ஸ் மை ப்ளசர் கிருஷ். தேங்க் யூ” என்று வாங்கிக் கொண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருந்த குணாலின் முகம் காய்ந்து போனது. இப்போது இதைப் பற்றி திவ்யாவிடம் எதையும் கேட்கக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வகுப்பிற்குள் வந்தான். அவள் இருக்கைக்குப் பின்னடியிருந்த மேஜையில் சென்று அமர்ந்தான்.

திவ்யா மும்முரமாக அக்கவுண்ட்ஸ் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள். குணால் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு திவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அருகில் சென்றால் கண்டிப்பாக அவன் அந்தச் சாக்காட்டைப் பற்றிக் கேட்பான் என்று அவனுக்குத் தெரியும். ஒரு வேளை திவ்யா தப்பாக நினைத்துக் கொண்டாள் என்ன செய்வது என்று பலமாக யோசனையில் ஆழ்ந்தான்.

“குணால், இங்க வாயேன்” என்று பின் பக்கம் திரும்பி திவ்யா அழைத்தாள்.

“ம்ம்..என்ன?”

“இந்தா உனக்குப் பாதி எனக்குப் பாதி” என்று சொல்லி கிருஷ் கொடுத்த சாக்லேட்டை அவனுக்குக் கொடுத்தாள்.

(தொடரும்)…


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading