Skip to content
Novel

டார்லிங் ஹபீபி – 4

September 24, 20250 second read

இரண்டு மூன்று நாள்களாக திவ்யா தனியாகவே இருக்க விரும்பினாள். இடைவேளையின்போது பையிலிருந்த குண்டு நாவலை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள். கிருஷ் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டுடன் அவளிடம் சென்று நின்றபோதும், அவள் கண்கள் புத்தகத்தைவிட்டு அகலவில்லை. குணாலுக்கு வியப்பாக இருந்தது.

“ஏன் திவ்யா இப்படித் தனியா இருக்கா? நான் பக்கத்துல போனா இரண்டு வார்த்தை மட்டும் பேசிவிட்டு புக் படிக்க ஆரம்பிச்சுடறா” என்று தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான். சட்டென்று திவ்யா குணாலை திரும்பிப் பார்த்தாள்.
அதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. “என்னடா அப்படி பார்க்கிற?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.

குணால் எழுந்து தயங்கி தயங்கி அவள் அருகில் சென்று அமர்ந்தான். திவ்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. “திவ்யா உடம்பு சரியில்லையா? ஏன் சரியா பேசமாட்டுக்கற?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல”, என்று அவனைப் பார்க்காமல் புத்தகத்தைப் பார்த்து பதிலளித்தாள்.

“இல்ல திவ்யா..நீ சரியா இல்ல….என்னனு சொல்லேன் ப்ளீஸ்”.

அவன் முகத்தைப் பார்த்தாள்.. அவன் தலை முடியை கோதிவிட்டு, “ஒன்னும் இல்லடா, சரியாயிடுவேன்” என்றாள்.

“அப்ப சரியாயில்லை…என் கிட்டச் சொல்ல மாட்டியா? உன்ன ரெண்டு நாளா இப்படி பார்க்க எனக்கு கஷ்ட்டமா இருக்கு”.

“ரொம்ப யோசிக்காத, படிக்கிற வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகக்திற்குள் கண்களை புதைத்துக் கொண்டாள்.

எக்கனாமிக்ஸ் வகுப்பு ஆரம்பமானது. ஆசிரியர் கேட்ட எந்தக் கேள்விக்கும் திவ்யாவால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுக்குத் தெரியவில்லை. நேத்து நடத்தின பாடம்தான் என்றாலும் திவ்யா முழித்துக் கொண்டு நின்றாள்.

அடுத்து குணாலிடம் அதே கேள்வியை ஆசிரியர் கேட்டார். குணாலுக்கு பதில் தெரியும். ஆனால் திவ்யா சொல்லாததால் அவனும் அமைதியாக இருந்தான்.

“இரண்டு பேர் கவனமும் படிப்பில் இல்லை. இதே போல் இருந்தீங்க, பேரண்ட்ஸ் கூப்பிட்டு சொல்லிவிடுவேன்” என்று இருவரையும் பார்த்து மிரட்டிவிட்டு வகுப்பிலிருந்து ஆசிரியர் வெளியேறினார்.

திவ்யாவுக்கு ஆசிரியர் மீது வந்த கோபத்தைவிட குணால் மீது அதீத கோபம் வந்தது. வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே செல்ல, அவள் குணாலிடம் வந்தாள்.

“ஏண்டா அப்படி பண்ண? உனக்கு ஆன்ஸர் தெரிஞ்சும் நீ ஏன் சொல்லல”, என்று சிவந்த முகத்துடன் கேட்டாள்.

குணால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். திட்டினாள். கடுகடுத்தாள். “என்ன ஆச்சு இவளுக்கு…இப்படி சிடுசிடுனு அவ என்னைக்கும் யார்கிட்டேயும் பேசி நான் பார்த்தது இல்ல. கிருஷ் ஏதாவது சொல்லி இருப்பானோ ?”, என்ற சந்தேகமும் வந்தது. ஆனால் அவனிடமும் அவள் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது நினைவுக்கு வந்தது.

திவ்யா இப்போது அவள் இடத்திற்குச் சென்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள். குணால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவின் ஒரு கை இன்னொரு கையின் புஜத்தை தொட்டுத் தொட்டுப் பார்தது. கையை இருக்கமாக வைத்துக் கொண்டு பைசப்ஸ் இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டே படித்தாள்.

உணவு இடைவேளை வந்தது. குணால் மீண்டும் திவ்யாவின் இடத்திற்குச் சென்றான். “வா திவ்யா சாப்பிடப் போலாம்”.

“சாரி டா குணால், உன்ன ரொம்ப கத்திட்டேன்ல. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா. என்ன மிஸ் திட்டனாங்கனு பீல் பண்ணல. நீ திட்டு வாங்கனது என்னாலனு தெரியும்….சரி விடு”.

“என்ன திவ்ஸ்..இங்கப் பாறேன்”.

திவ்யாவின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. அவள் புத்தகத்தைப் பார்த்தபடி இருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக புத்தகத்தை நனைத்தது.

அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்தான். எதைப் பற்றியும் கேட்காமல், “எல்லாம் சரியாகும் திவ்ஸ்” என்று மெல்லமாகச் சொன்னான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, மெல்லிதாக புன்னகைத்தாள். “வா டா கேன்டீன் போலாம்” என்றாள்.

இருவரும் சேர்ந்து கேன்டீன் சென்றார்கள். அங்கு கிருஷ் வேறொரு பெண்ணுக்கு இரண்டு ஸ்னிக்கர்ஸ் கொடுத்து பேசிக் கொண்டிருந்தான்.

திவ்யா குணாலைப் பார்த்துச் சிரித்தாள். குணால் வரிசையில் முந்தி கொண்டு, இரண்டு வடா பாவையும் ஒரு கிட்கேட்டையும் வாங்கி கொண்டு ஓடி வந்தான்.

இருவரும் கேன்டீன் பக்கதிலிருந்த பெரிய வேப்பமரத்தில் நிழலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“திவ்வா போன வாரம் நம்ம சிட்டி செண்டர் ப்ளான் கேன்சல் ஆச்சு..இந்த வாரம் போலாமா?”

இன்னொரு நாள் பார்க்கலாம் குணால். நான் எங்கேயும் வரல என்றாள்.

“ப்ளீஸ்…” என்று குழந்தையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினான்.

“சரி, அவங்க ரெண்டு பேரும் ஃப்ரீயானு கேட்கிறேன்”.

“இப்பயாவது சொல்லேன் திவ்ஸ்..யாரு அந்த ரெண்டு பேர்”.

அவன் கண்ணத்தைத் தொட்டு,” சமர்த்து டா நீ”, என்றாள்.

திவ்யா இப்படி அதிகம் தொட்டு பேசய்து கிடையாது. இன்று மட்டும் இரண்டு முறை தொட்டுப் பேசி இருக்கிறாள் . என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவாறு அவளுடன் கிளம்பி வகுப்பிற்குச் சென்றான்.

 

(தொடரும்)….


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading