
21 Mar என் வீட்டுச் சிட்டுக்குருவிகள்
நான் வசிக்கும் இடங்களில் என்னைச் சுற்றி இயற்கையின் வண்ணங்களை வைத்துக் கொள்வது பிடிக்கும். இதற்காகப் பெரிய மெனக்கெடல்கள் செய்வது இல்லை. வீட்டின் வரவேற்பறையில் ஒரு பக்கம் மணி ப்ளாண்ட் படர்ந்து பச்சைப் பசேல் என்று இருக்கும். இன்னொரு பக்கம் மீன் தொட்டியில் நான்கு தங்க நிற மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கும்.அப்படியே அதன் எதிர் புரத்தில் இருக்கும் கூண்டில் இரண்டு பட்ஜி பறவைகள் கொஞ்சிக் கொண்டிருக்கும்.
பால்கனியில் மல்லி, கற்றாழை, இட்லி பூ போன்ற செடிகள் சலசலவென்று வளர்ந்து இருக்கும். துபாய் வெயிலுக்குக் காப்பாற்றக் கூடிய செடிகள் இவை மட்டுமே. ஒரு நாள் படர்ந்த கொடியின் நடுவில் ஒரு கூட்டை மாட்டி வைத்தேன்.
வருடத்தில் குறைந்தது இரண்டு ஜோடிப் பறவைகள் குஞ்சு பொரித்துச் செல்லும் இடம் என் பால்கனி. இந்த வருடமும் அதற்குக் குறைவில்லை. கூட்டை வைத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டு குருவிகள் வந்து பார்த்தன. அவ்வப்போது வாயிலிலும் கால்களிலும் காய்ந்த குச்சிகளைக் கொண்டு வந்தன. அவர்கள் இரசனைக்கு ஏற்ப அந்தக் கூட்டைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டன.
விடியற் காலை தொழுகைக்கு எழுந்த எனக்கு, எதிர்பாராத ஆனந்தம் காத்துக் கொண்டுஇருந்தது.
ஒரு ஜோடி சிட்டுக் குருவிகள் மட்டுமே இருக்கின்றன என்ற நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ,அன்று மட்டும் ஒன்பது சிட்டுக் குருவிகளைப் பார்க்க முடிந்தது. இதைவிடச் சிறந்த விருந்தோம்பலை வேறு எங்குக் காணமுடியும்.
சுற்றி உள்ள ஒவ்வொன்றிலும் பாடம் இருக்கின்றது.பார்வையைச் சரிச் செய்தால் போதும்.
Sorry, the comment form is closed at this time.