குணாலுக்கு தூக்கம் வரவில்லை. தன் அறையின் கண்ணாடி பால்கனி வழியாக இருட்டில் மின்னிக் கொண்டிருந்த புரூஜ் கலீபாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் முழுக்க அன்று திவ்யாவின் நினைவுகள் மட்டுமே இருந்தன.
திவ்யாவும் குணாலும் இரண்டாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். திவ்யாவின் அப்பா சென்னை வாசி, அம்மா பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். குணால் அம்மா அப்பா இருவரும் பஞ்சாபிகள்.
துபாயில் இருக்கும் முக்கியக் குடியிருப்புப் பகுதி கராமா. இங்கு அதிகமாக ஆசிய மக்கள் இருப்பார்கள். அதிலும் இந்தியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். எந்த ஊர் உணவு வேண்டுமென்றாலும் இங்கு வந்தால் கிடைத்துவிடும். கிட்டத்தட்ட நம் ஊர் பாண்டி பஜார், டி நகர் போல் என்று சொல்லலாம். அந்தப் பரபரப்பான இடத்தில் பெரிய பெரிய குடியிருப்புகள் இருக்கும். திவ்யா வேறு பள்ளிக்குச் செல்லும் வரை, இருவர் வீடுகளும் கராமாவில் இருந்தன. இப்போதும் குணால் வீடு அங்குதான் உள்ளது. ஆனால் திவ்யா சிலிகான் ஓயாஸிற்கு வீடு மாற்றிச் சென்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன.
பள்ளிப் பேருந்து, கேம்பிரிட்ஜ் இண்டர்னேஷனல் பள்ளி வளாகத்திற்குள் சென்று நின்றது. குணால் இறங்கினான். சிறுவயதிலிருந்து படிக்கும் பள்ளிக்கூடம் என்றாலும், ஐ.ஜி.சி.எஸ்.இ( முடித்து பன்னிரண்டாவது வகுப்பின் முதல் நாள் புதிதாக இருந்தது. முதல் நாள் என்பதால் மைதானத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாகத் தெரிந்தது. கூட்டத்தைக் கடந்து வரவேற்பறை சென்றான்.
பன்னிரண்டாவது வகுப்பில் சேர்ந்துள்ள புதிய மாணவர்கள் கூட்டமாக அங்கு நின்றிருந்தார்கள். அவர்களுக்கான ஓரியண்டேஷன் ப்ரோகிராம் அன்று காலை ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார்கள். புதிய மாணவர்கள் மட்டுமின்றி அங்குப் பழைய மாணவர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மாணவர்கள் அனைவரும் எந்த வித்தியாசமும் இன்றி வெள்ளை நிறச் சட்டையையும், சாம்பல் நிற கால் சட்டையையும் அணிந்திருந்தார்கள். சில நண்பர்களோடு குணால் பேசிக் கொண்டு நின்றிருந்தான். திடீரென்று அவன் அங்கு திவ்யாவைப் பார்த்தான். எதுவும் யோசிக்காமல் ஓடிச் சென்று அவள் முன் நின்றான். நான்கு வருடத்தில் அவள் உயரம் இரட்டிப்பாகி இருந்தது. கண்கள் அதே சீன பொம்மை போல் தெரிந்தன. பளிச்சென்ற முகம். கறுப்பு பட்டுத் துணியை, இழை இழையாகப் பிரித்தால், நீளமான கருங் கூந்தலாக மாறும். அவள் அருகில் சென்றவுடன் மென்மையான பூ வாசனை மணம் வந்தது. குணாலைப் பார்த்தவுடன் திவ்யாவும் குதூகலமானாள்.. அந்தச் சின்னக் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன..
“ஹே குணா..எப்படி இருக்க ப்ரோ” என்று கைகுலுக்கினாள்.
“நல்லா இருக்கேன்….வாட் அ சர்ப்ரைஸ்”
“நீ ரொம்ப ஜாலியா இருக்கனு கேள்விப்பட்டேன் அதான்” என்று சிரித்தாள்.
“நிம்மதியா இருந்தேன்..இனி வாஹே குருதான் என்னை காப்பாத்தனும் ” என்று குணாலும் சிரித்தான்.
“எனக்கு மார்கெட்டிங் எடுக்கனும், அது அந்த ஸ்கூல்ல இல்ல, அதான் அப்பா இங்க சேர்த்துவிட்டார்”
“நீயும் மார்கெட்டிங் எடுத்து இருக்கியா?..கூல்”
“அப்ப நீயுமா? சரியா போச்சு போ..இரண்டு பேரும் சேர்ந்தா உருபட்ட மாதிரிதான்” என்று மீண்டும் சிரித்தாள்.
திவ்யாவின் சிரிப்பில் ஒரு சின்ன சத்தம் இருக்கும். அன்று அவன் காதுகளுக்குச் சங்கீதம் போல் கேட்டது. அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“நீ ஆடிட்டோரியம் வரல? வா போலாம்”, என்று பேசியபடி இருவரும் நடந்தார்கள்.
கிட்டத்தட்ட பன்னிரண்டாம் வகுப்பில் நானூறு மாணவர்கள் இருப்பார்கள் என்று நிரம்பி இருந்த ஆடிட்டோரியம் பார்த்துச் சொல்லிவிடலாம்.
திவ்யாவும் குணாலும் ஒரே வரிசையில் அமர்ந்து இருந்தார்கள். முதலில் பள்ளியின் தாளாளர் பேச ஆரம்பித்தார். உங்கள் வாழ்க்கையில் பன்னிரண்டாவது பதின்மூன்றாவது முக்கியசொன்னார். அந்தப் பள்ளியின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போனார்.
இரண்டு மணி நேரத்தில் நிகழ்வு முடிந்து புது வகுப்புகளுக்கு மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
இருவரும் பேசியபடி ஒவ்வொரு 12பி-வகுப்புக்குள் நுழைந்தார்கள். குணால் பழைய நண்பர்கள் பலர் இருந்தனர். திவ்யாவுக்கு தெரிந்த முகங்கள் ஒன்றிரண்டு மட்டும் இருந்தன. அவர்களும் அவ்வளவு நெருக்கமானவர்களாக இல்லை.
குணால் தன் நண்பர்களிடம் , திவ்யா என் சைல்ட் ஹூட் ப்ரண்ட் என்று அறிமுகம் செய்து வைத்தான்.
வகுப்புகள் ஆரம்பித்தன. வட்ட மேஜைகளில் மாணவர்கள் குழுவாக அமர வேண்டும். திவ்யாவும் குணாலும் ஒரே மேஜையில் அமர்ந்தார்கள்.
இடைவேளை வந்து. நான்கு வருடங்களில் பேசாத விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் , திவ்யா போன வருடம் பழைய பள்ளிகூடத்தில் கிச்சாவை டேட் பண்ணதைப் பற்றிச் சொன்னாள்.
“என்ன சொல்ற திவ்யா? நம்பவே முடியல? நீயா?”
“என்ன நீயா..நுயானு…டேட் பண்ணேன் சொன்னதுக்கு ஏன் டா இவ்வளோ பில்டப்? நீ சொல்லு ”
“என் கதையை அப்பறமா சொல்றேன்..கிச்சா கத என்ன ?”
“டேட் பண்ணேன் அவ்வளோதான்..செம ஹேண்ட்சமா இருப்பான். ஆனா பத்து நாள் பழகின அப்பறம்தான் தெரிஞ்சது சரியான லூஸ்னு..அதான் லூஸ்ல விட்டுட்டேன்”
இதைக் கேட்டு குணால் வாய்விட்டுச் சிரித்தான்.
(தொடரும்)..
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







