ஞாயிற்றுக் கிழமை என்றால் பொதுவாகத் துயில் எழும் நேரத்தைத் தள்ளி வைப்போம். ஜென்ஸீக்களுக்கு அது ஒரு தனிச் சுகம். ஆனால் குணாலின் கதை வேறு. வார இறுதி நாள்களில் விடியற்காலை எழுந்து ஷேக் ஜாயீத் சாலையிலிருக்கும் குருத்துவாரா செல்ல வேண்டும். அன்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவனை அவன் அம்மா எழுப்பிக் கொண்டிருந்தார்.
“குணால் ..புத்த்தர்..எழுந்திரி. நேரம் ஆகுது”
“பைவ் மினிட்ஸ் மம்மி” என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கினான்.
“சீக்கிரம் போனாதான், திரும்பி சீக்கிரம் வரமுடியும்…உன் ப்ரெண்ட்ஸோட சிட்டி செண்டர் போக முடியும்” என்று சொல்லியபடி அவன் அறையில் பரப்பிக்கிடந்த துணிகளை அடுக்கினார்.
சிட்டி செண்டர் என்று காதில் விழுந்தவுடன், சட்டென்று கண்களைத் திறந்தான் குணால். குளியலறைக்குச் சென்றவன் அம்மாவின் இன்னொரு சத்தம் வருவதற்கு முன்பே வெளியே வந்தான்.
“குணால் என்ன அதிசயம் பத்து நிமிஷத்துல பாத்ரூம்ல இருந்து வெளில வந்துட்ட”, என்று அம்மா கிண்டலடித்தார்.
அவன் சிரித்தபடி வேக வேகமாகத் தயாரானான். பதினைந்து நிமிடத்தில் ஷூவையும் மாட்டிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
“புத்தர்,என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?” என்று கேட்டபடி மீன் தொட்டிக்கு பக்கத்திலிருந்த கைக்கடிகாரத்தை அணிந்தபடி அப்பா கேட்டார்.
“ஒண்ணும் இல்ல பாபா”.
“அச்சா….”, என்று அவனைப் பார்த்தபடி, “கோமல் இன்னுமா ரெடி ஆகற?”
“ஆகய்..ஆகய் வந்துட்டேன்” என்று அறையிலிருந்து வெளியே வந்த அம்மா, ஆரஞ்சு நிற சல்வாரில் பளிச்சென்று இருந்தார்.
குணாலும் அதே நிறத்தில் டி ஷார்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தான். “நல்ல வேளை நான் ஆரஞ்சு போடல..”என்று வம்பிழுத்தார் அப்பா.
குணாலின் அப்பாவும் அம்மாவும் பேச ஆரம்பித்தால், நிறுத்திக் கொள்ளச் சமயம் எடுக்கும். நடுநடுவே சிரிப்பார்கள், பாடுவார்கள், குருநானக்கை நினைத்து நன்றி சொல்லுவார்கள். ஆனால் குணால் அவர்களைப் போல் இல்லை. இவர்கள் சாயல் மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் வரும். அவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். கராமாவில் கிளம்பிய கார், எந்த வாகன நெரிசலும் இல்லாமல் வெண்ணெய்யில் வழுக்கிக் கொண்டு போகும் வாழைப்பழம் போல் சல்லென்று சென்றது. ஜெபல் அலி பகுதி, வார நாள்களுக்கு மாறாக மிக அமைதியாக இருந்தது. வண்டி தேவாலயம் கடந்து கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் நின்றது. தேவாலயத்துக்குப் போகிறவர்களையும், கோயிலுக்குப் போகிறவர்களையும் பார்த்தபடி குணால் இறங்கினான். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்ற புரிதலின் அமைதி அந்த இடத்தில் தெரிந்தது.
குணாலும் அப்பாவும் தலையில் கைக்குட்டையைப் போட்டுக் கொண்டார்கள். அம்மா துப்பட்டியை எடுத்து தலையை மூடிக் கொண்டார். வண்டியிலிருந்து இறங்கி குருத்துவாரா நடக்கும் வழியில் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்து, சஸ்ரிய கால் என்று முகமன் கூறிக் கொண்டார்கள்.
உள்ளே மிக அமைதியாக இருந்தது. பெரிய திருமண மண்டபத்தில் நாற்காலியையெல்லாம் எடுத்துவிட்டு நடுவில் குருநானக் சமாதியை மட்டும் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. தரை முழுக்க பெரிய கார்பெட் மெத்மெதென்று இருந்தது.
அம்மா அப்பா தர்பாருக்கு அருகில் சென்று அமர்ந்து கண்களை மூடினார்கள். குணால் பின்னாடி அமர்ந்தான். அவன் கண்களை மூடினான். மனம் கன்னாபின்னா என்று அலைபாய்ந்தது.
“யார் அந்த இரண்டு பழைய நண்பர்களாக இருக்கும்? திவ்யா ஏன் இப்படி இருக்கா? அவளுக்கு என்னவோ பிரச்னை. பாவம் என்கிட்டக் கூட சொல்ல முடியாதுனா என்னவா இருக்கும்? சட்டென்று சென்ற வருடம் அவன் டேட் செய்த பூஜாவின் ஞாபகம் வந்தது. ஒன்பதாவதுல இருந்து பூஜாவை எப்படி பார்த்துகிட்டேன். ரெண்டு வருஷம் நல்லா பழகிட்டு, நான் கனடா போறேன். வாய்ப்பு இருந்தா லைஃப்ல சந்திக்கலாம்னு சொல்லிட்டு எப்படி போக முடிஞ்சது? அய்யோ என்ன என்னவோ யோசிக்கிறேன். குருநானக் ஜி என்ன மன்னிசிச்டுங்க. திவ்யா கூட நான் எப்பவும் இருக்கணும் அவளும் என் கூட இருக்கணும். ஹெல்ப் அஸ். ஐ நீட் யூ” என்று அவன் மனம் முனங்கிக் கொண்டே இருந்தது.
குணாலின் அம்மா அவன் தோள்களின் மேல் கை வைத்து, “புத்தர் எழுந்திரு” என்று சொன்ன போதுதான் எண்ணங்கள் நின்றன. அங்கிருந்து உணவு பரிமாறும் இடத்திற்கு வந்தார்கள். இலவசச் சாப்பாடு. ஆயிரம் பேர் வந்தாலும் ஐந்து பைசா செலவில்லாமல் வயிறு நிறையச் சாப்பிடலாம். அன்று லங்கரில் ராஜ்மா, ரொட்டி, பாயாசம், ஆலு சப்ஜி இருந்தது. பேப்பர் ப்ளேட்டில் வாங்கிக் கொண்டு, வரிசையாகத் தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுடன் குணாலும் உட்கார்ந்தான்.
சாப்பிட்டு முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியில் திவ்யாவிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வந்தது.
“அலோ..சொல்லு திவ்யா”.
“நான் இன்னைக்கு வரல குணால்..சாரி டா ப்ளான் கேன்சல் பண்றேன்”.
“என்னச்சு சொன்னாதான தெரியும்…எனக்குத் தெரியாது..யாரும் வரலனா கூட நான் மிர்திப்ல இருப்பேன். இப்ப வைக்கிறேன்”.
அவனுக்கு திவ்யா மீது கோபமாக வந்தது. இவ எதுக்கு இந்த ஸ்கூல் வந்தான் இருக்குனு அம்மா அப்பா இருப்பதைக் கூட கவனிக்காமல் புலம்பினான்.
வளவளனு பேசிக் கொண்டு வந்த அப்பா இப்போது அமைதியாக வண்டி ஓட்டினார்.
(தொடரும்)…
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







