Skip to content
Novel

டார்லிங் ஹபீபி – 6

September 26, 20250 second read

மிர்திப் சிட்டி சென்டர் வாசலில் குணாலை இறக்கிவிட்ட அவன் அப்பா, “புத்த்தர் ஆர் யூ சூர்?”.

“நான் பார்த்துக்கறேன் பாபா…ஏதாச்சம்னா கால் பண்றேன். பை” என்று சொல்லிவிட்டு பெரிய மாலுக்குள் நுழைந்தான்.

முதல் தளத்திலிருந்து வடக்கு மூலையிலிருந்து தெற்கு மூலை நடக்கப் பதினைந்து நிமிடங்கள் ஆனது. எஸ்கலேட்டரில் ஏறினான். பன்னிரண்டு மணிக்குச் சந்திக்கலாம் என்பதுதான் திட்டம். குணால் சரியாகப் பதினொன்று ஐம்பத்தைந்துக்கு மாலுக்குள் வந்தான். திவ்யா சொன்ன நேரத்திலிருந்து அரை மணி நேரம் கழித்துத்தான் வருவாள் என்று அவனுக்குத் தெரியும். முதல் தளத்தில் இறங்கியவன் ஸ்டார்ப்க்ஸ் கடையைப் பார்த்தான். அவனைப் போலச் சில மாணவர்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜாவின் ஞாபகம் வந்தது. அவள் எப்போது இங்கு வந்தாலும் , ஹாட் சாக்லேட்டை ஒரு பெரிய கப்பில் வாங்கி கையில் வைத்துக் கொள்வாள். ஒரு முறை கூட அதை அவள் முழுதாகக் குடித்த ஞாபகம் இல்லை. “ச்சை இப்ப எதுக்கு அவ ஞாபகம் வருது? கனடா போன கையோட இன்ஸ்டால ப்ளாக் பண்ணா, அப்பறம் வாட்ஸப், டிஸ்கார்ட்ல கூட விட்டு வைக்க வில்லை. போய் தொலையட்டும். எனக்கு என்ன கவலை” , என்று மனம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. கால்கள் தானாக இரண்டாம் தளம் செல்லும் எஸ்கஸலரேட்டரில் ஏறியது.

என்ன நம்பிக்கைல நான் இங்க வந்து இருக்கேன்?. திவ்யா வருவாளா? என்று யோசித்தபடி புட் கோர்டில் இருக்கும் மெக் டோன்லட் பக்கம் சென்றான். அதற்குப் பக்கத்தில் கே.எப்.சி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். வலது பக்கம் நீண்டு கொண்டு சென்ற மனிதக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு மேஜை காலியாக இருந்தது. விரைந்து சென்று உட்கார்ந்தான். அலைப்பேசியை பாக்கெட்டில் இருந்து எடுத்தான் .

திவ்யாவிடமிருந்து மெசேஜ் வந்திருக்கிறது என்று நோட்டிபிகேஷன் வந்தது. என்ன அனுப்பி இருக்கிறாளோ என்ற பதைபதைப்புடன் செயலியைத் திறந்தான்.

“திரும்பிப் பாருடா”.

நாற்காலியிலிருந்து எழுந்து நாலா பக்கமும் பார்த்தான். அலைப்பேசியை எடுத்து திவ்யாவை அழைத்தான்.

“அலொ…திவ்யா எங்க இருக்க?”

“பின்னாடி”.

“சும்மா விளையாடாத..ஐ காண்ட் சீ யூ”.

கே.எப்.சிக்கு ஆப்போசிட்ல மர்ஹபா மந்தி தெரியுதா?

“ம்ம்..”

“அங்கப் பாரு, நான் கை அசச்சிட்டு இருக்கேன்…”

“யெஸ் ஐ கேன் சி யூ”. என்று அவன் அங்கிருந்து எழுந்து திவ்யாவிடம் சென்றான்.

“என்ன டா வந்து ஒரு போன் கூட பண்ணல?” என்று கேட்டாள்.

“அதான் நீ வர மாட்டேன். ப்ளான் கேன்சல் சொன்னல..அப்பறம் எதுக்கு போன் பண்ணனும்?” என்று பொய்க் கோபத்தோடு பார்தான்.

“சாரி..டா. நீ வருவனு தெரியும். அதான் வந்துட்டேன்.அப்பறம்..அந்த ரண்டு பேர் வந்துட்டு இருக்காங்க”.

“எதுக்கு இந்த பில்டப்?”

திவ்யா சிரித்தாள். “அவங்களைப் பார்த்து உன் எக்ஸ்ப்ரசன் எபப்டி இருக்குனு வீடியோ எடுத்துக் காட்டறேன்..அப்ப சொல்லு”.

அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரோ பழைய நண்பர்கள் அவ்வளவே என்று இருந்தான். “திவ்யா..என்ன ப்ராப்ளம் ப்ளீஸ் சொல்லு”.

“எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்றியானு’, அவன் கைகளைப் பிடித்துக் கேட்டாள்.

ஆமோதிப்பது போல் தலை அசைத்தான். நானா சொல்ற வரைக்கும் என்கிட்ட கேட்காத…அம்மாகிட்ட ஷேர் பண்ணிட்டு முதல் வேளையா உன் கிட்டத் தான் சொல்லுவேன்” என்று அவள் சொல்லுபோது குணால் நெகிழ்ந்தான்.

“இத மட்டும் சொல்லேன்..யாரையாவது லவ் பண்றியா? ப்ரேக் அப் ஆ”.

திவ்யா சடாலென்று அவன் கைகளை உதறி, “குணால்..சரி விடு”.

“ஐ அம் சாரி..சாரி”, என்̀று கெஞ்சினான்.

பின்னாலிருந்து ஒரு கை அவன் கண்களை இறுக்க மூடியது. கைகளைத் தொட்டான். மென்மையாக இருந்தது. “ஹு இஸ் திஸ்?”

அப்போதும் எந்தப் பதிலும் இல்லை. ஏதேதோ பெயர்களைச் சொன்னான். கைகள் விலகின.

எலுமிச்சை நிற க்ராப் டாப், ஜீன்ஸ் அணிந்த பெண் கண் முன் நின்றாள். திவ்யா அவன் உணர்வுகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே…. கிரேஸ். வாட் அ சர்ப்ரைஸ் ப்ரோ..ஓ மை காட்” என்று எழுந்தான். கிரேஸ் அவளை லேசாக அணைத்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள். பக்கத்தில் அக்‌ஷராவும் நின்றிருந்தாள். குணாலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவளையும் அணைத்து விட்டு அமர்ந்தான்.

“ஓ மை காட்..இட்ஸ் ரியல் சர்ப்ராஸ் மேன்” என்று திவ்யாவைப் பார்த்தான்.

கிரேஸூம், அக்‌ஷராவும் நர்ஸரி முதற்கொண்டு எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தார்கள். இவர்கள் குழுவில் இன்னும் இரண்டு ஆண்கள் இருந்தனர். ரோஷன், ஜூலியன். ரோஷன் இந்தியாவிற்குச் சென்றுவிட்டான். ஜூலியன் நெதர்லாந்து. கிரேஸ் பிலைபைன்ஸ் சென்றதாகத் தகவல். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இவர்களைப் பார்க்கிறான். அதிலும் கிரேஸ் என்றால் அவனுக்கு கூடுதல் ஈர்ப்பு. அவளைப் பார்த்த வியப்பை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பேசினார்கள். சிரித்தார்கள். பர்கர் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

“கிரேஸ் ஆர் யூ ஸ்டில் சிங்கில்” என்று சிவந்தான்.

“இன்னுமா டா…உன் பப்பி லவ்வ மறக்கல”, என்று கிரேஸ் அவன் கன்னங்களைக் கிள்ளினாள்.

“வெயிட் பண்ணு, இப்ப என் கிளாஸ்ல ஒரு பையன் செட் ஆகி இருக்கான். பார்க்கிறேன் எவ்வாளோ நாள் தாக்குப்பிடிக்கிறானு” , என்றாள்.

அனைவரும் சிரித்தார்கள்.

திவ்யா முகமும் சிரிப்பால் நிரம்பியது. அவளைப் பார்த்தபடி செவன் அப்பை எடுத்து உறிஞ்சினான்.

திவ்யா எழுந்து தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றாள்.

“குணால்” என்று கிரேஸ் சீரியஸாக அழைத்தாள்.

“சொல்றதைக் கவனி. இப்ப நீ தான் திவ்யாவோட இருக்க. அவ என்ன சொன்னாலும் ஜட்ஜ் பண்ணாம கேளு. ஜ்ஸ்ட் பீ தேர் பார் ஹெர் ப்ரோ”.

குணால் முகம் சட்டென்று இறுக்கமானது.

“உனக்குத் தெரியும்னு காட்டிக்காத” என்றாள் அக்‌ஷரா.

“எனக்கு என்ன தெரியும்…ப்ளீஸ் சொல்லுங்க… அவ வரதுக்குள்ள”.

“அவளே சொல்லுவா ப்ரோ…நீ பக்கத்துல இருக்கிற தைரியம் தான் நாங்க ஹோப் ஃபுல்லா இருக்கோம் ” என்று இருவரும் மாறி மாறி ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்.

திவ்யா தண்ணீர் பாட்டிலுடன் வந்தாள்.

(தொடரும்)….


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading