வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம் - Naseema Razak
16036
post-template-default,single,single-post,postid-16036,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம்

வெற்றி பெற்றவர்கள் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் வெறும் தோல்வியை அல்ல, படு தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். இப்போது சட்டென்று எனக்கு ஜாக் மா கதைதான் ஞாபகம் வருகிறது. அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் பலருக்குத் தெரியும். அமேசான் என்கிற பெரிய சாம்ராஜ்யத்திற்கு நிகரா அலிபாபாவைச் சொல்லலாம். அதை ஆரம்பித்தவர் ஜாக் மா.

பள்ளிக்குச் சென்றது முதல் ஜாக் மாவிற்குப் பரிசாகக் கிடைத்தது தோல்விகள் மட்டும்தான். ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோற்றார். உயர்நிலைப் பள்ளியில் மூன்று முறை. கல்லூரியில் சேருவதற்காக எழுதிய நுழைவுத் தேர்வில் மூன்று முறை. காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை. தேர்வாகவில்லை. சரி, கே.ஃப்.சியில் எப்படியாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கெல்லாம் கனவாகக் கலைந்து போனது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குப் பத்து முறை விண்ணப்பித்துத் தோற்றுப் போனார். இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை. ஜாக் மா சோர்வடைந்தது உண்மை. ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. சீன மொழி பெயர்ப்பாளராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

“அதற்குப் பின்னர் அவர் சீனா திரும்பி, ஆரம்பித்த முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் கூட்டாளியாகச் சீன அரசு நிறுவனம் இணைந்தது. சில மாதங்களில் அந்த நிறுவனத்தை அரசு கையில் கொடுத்துவிட்டு ஜாக் மா வெளியேறினார். தோல்வியும் துரோகங்களும் அவரை விரட்டிக் கொண்டே இருந்தன. மீண்டும் வேலை தேடும் படலம். அரசு வேலை. அமெரிக்கா பயணம். அதற்குப் பின்னர் ஆரம்பித்ததுதான் உலகம் அறிந்த அலிபாபா ஆன் லைன் ஷாப்பிங் இணையம்.

“ஜாக் மாவை விட, அதிகமாகத் தோற்றுப் போகும் சந்தர்ப்பங்கள் நமக்கு அமையலாம். அதற்கு வெற்றி அற்ற வாழ்க்கையை வாழ்வோம் என்று அர்த்தமில்லை. தோல்விகளைக் கையாள்வது லேசுபட்ட காரியம் அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருப்பது போல் தோல்வியை எதிர் கொள்ளச் சில வழிகள் இருக்கின்றன.

1. தோல்விகள் என்றால் அவமானம் என்கிற எண்ணத்தைக் களைய வேண்டும். தோற்கிறீர்கள் என்றால் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது வாய் வார்த்தைகளாக, எண்ணங்களாக மட்டும் இல்லாமல் செயலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.

2. நாம் அனைவரும் எப்பொழுதும் சரியான தேர்வைச் செய்வோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தவறான முடிவுகளும் தேவையில்லாத வேலைகளும் குறுக்கிடும். அது சகஜம். சிறிதும் யோசிக்காமல் யூ டர்ன் போட்டு விடுங்கள்.

3. தோல்வி வந்தவுடன், உலகம் இருண்டுவிடும் என்று பயப்படுகிறோம். அது மூடி இருக்கும் கதவுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4. தோல்வியைப் படிப்பினையாகப் பாருங்கள். தோல்வியைப் போல் சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை. அந்த ஆசானைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

5. தோல்வி மூலம் கிடைத்த அனுபவம் உங்கள் அடுத்த நகர்வுகளைச் சரி செய்யும் . திறமை மூலம் வெற்றி அடைந்தவர்களைவிட, தோல்வியை வரவேற்று கற்றுக் கொண்டவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

6. தோல்வி ஒரு முறை அல்ல எத்தனை முறை வந்தாலும், அடுத்து என்ன என்று யோசிக்க மனத்தைப் பழகுங்கள்.

7. தோல்விக்கு அடிநாதமாக இருக்கும் காரணங்களை ஆராயுங்கள். நோக்கங்களைச் சரி செய்து கொள்ள அது உதவும்.

8. எத்தனை முறை விழுகிறோம் என்பது தோல்வி அல்ல. ஜாக் மாவின் வாழ்க்கையில் ஒரு முறையும் தோல்வியைச் சந்திக்காமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. அவரது விடா முயற்சியை நாம் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

9. சமூகத்திற்குப் பயந்து, மற்றவர்களின் வசைக்குப் பயந்து எல்லாம் நாம் தோல்வியைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் நான்கு நாள்களுக்கு மற்றவர்கள் வாய்க்கு அவலாக இருப்போம். ஆனால், தோல்வியை ஏற்று முன்னேறும் போது சரித்திரம் படைக்கும் சக்தி கிடைத்துவிடும்.

10. இறுதியாக ஒன்றை மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனத்திற்கு வெற்றியைக் கொண்டாடத் தெரியாது.

ஜாக் மா மட்டும் அல்ல, வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியை விடத் தோல்விகளே நிறைந்திருக்கின்றன. தோல்வியைச் சரியாக ஏற்றுக் கொள்ளுங்கள், கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்.

No Comments

Post A Comment