ஐக்கிய அமீரகத்தின் ஒரு பகுதியான புஜேரா துபாயைப் போல் ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த நகரம் இல்லை. துபாயிலிருந்து ஒன்றரை மணி நேர தூரம்.மலீஹா சாலை என்னும் ஹைவேயைப் பிடித்துவிட்டால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பாலைவனம் மட்டுமே தென்படும். செம்மண் நிறத்திலும், செம்மண்ணுடன்ஒரு துளி வெண்மை சேர்த்தால் கிடைக்கும் நிறம் என்று மாறி மாறிவரும். பாலைவனத்தை மட்டுமே பார்த்து மனம் சலிப்படைவதற்குள் இருபுறமும் மலைகள் உயர்ந்து நிற்கும். ஆங்காங்கே வரும் கொண்டை ஊசி வளைவுகள் ஒரு சாகச உணர்வைக் கொடுக்கும். துபாய் நெரிசலில் வாகனங்களை ஓட்டி சலிப்படைந்தவர்களுக்கு இந்தச் சாலை ஒரு சொகுசு சுந்தரி.
சில நாள்களுக்கு முன் அலுவல் வேலையாக புஜேரா போனபோது அந்த அதிசயம் நடந்தது. கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் செல்வதற்கு முன் வண்டியை வலதுபுறப் பாதையில் வைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட 750 மீட்டர், வெள்ளைக் கோடுகள் கொண்ட சிறிய கட்டங்கள் தெரிந்தன. இதைப் பற்றி அப்பா முன்பே சொல்லி இருந்தார். அதனால் கவனமாக, 130 வேகத்தில் சென்ற வண்டியை 80க்கு கீழ் கொண்டு வந்தேன். வண்டியின் டயர்கள் அந்தக் கோட்டின் மேல் செல்லும் போது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியைக் கேட்க முடிந்தது. ஒலிபெருக்கிகளோ வேறு எந்தக் கருவிகளோ இல்லை. கார் ஜன்னல்கள் மூடி இருந்தன. இருப்பினும் தெள்ளத்தெளிவாக, கேட்க வேண்டிய சத்தத்தில் இதமாக இருந்தது.
இனி ஒவ்வொரு முறையும் அங்குச் செல்லும்போது, வண்டி தானாக பீத்தோவனின் விரல்களைப் பற்றிக் கொள்ளும். தோற்றாலும் விட மாட்டேன் புத்தகத்தில் பீத்தோவனைப் பற்றி எழுதி இருப்பேன். பீத்தோவன் இந்தச் சிம்பொனியை அமைக்கும்போது அவர் காதுகள் முற்றிலும் கேட்கும் சக்தியை இழந்து இருந்தன. தான் உருவாக்கும் இசையைக் கேட்க முடியாமல் அவர் மிக மன உலைச்சலில் இருந்த காலமும் கூட. இதனால் தற்கொலை எண்ணங்கள் அவரை நிலைகுலையச் செய்திருந்தது. மிகச் சில நண்பர்களிடம் மட்டுமே காது கேளாமை பற்றி அவர் பகிர்ந்திருந்தார். மன உலைச்சல், இயலாமை அனைத்தையும் மீறி அவர் மேடையேறிய அன்று அந்த அற்புதம் இசை உலகில் நிகழ்ந்தது. முதல் முறை சிம்பொனியை வேறு விதமாக இசைத்தார். அவர் இசை அமைத்த இந்தச் சிம்பொனியை சாலையின் இசையாகத் தேர்ந்தெடுத்த அமீரக அதிகாரிகளின் தேர்வுக்குப் பாராட்டைச் சொல்ல வேண்டும்.
இசைச் சாலை என்பது மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே புதிது. 1950 ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதன் முதலாக இசைச் சாலை அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அமெரிக்கா, கொரியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இதைச் செய்தனர். சீனாவில் உள்ள பெய்ஜிங்கிற்கு அருகில் பல இசைச் சாலைகள் உள்ளன.
இதற்குப் பின் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் பியானோவில் இருக்கும் வெள்ளைத் தட்டுகளைப் போல் சாலையில் சின்ன அளவில் அதாவது கோடு அளவிற்குப் பள்ளம் வெட்டுவார்கள். சரியான இடைவெளிகள் விட்டு பள்ளங்கள் மேலும் கீழும் இருக்கும். சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், இசையில் உள்ள ச, ரி, க, ம, ப வை, ‘ச’ பள்ளங்களுக்கு இடையே 63 மிமி இடைவெளி இருக்கும். ‘ரி’ க்கு 57 மிமி இடைவெளி. ‘க’ க்கு 50 மிமி. வண்டியின் டையர்கள் அதன் மேல் ஏறும் போது இசை ஒலிக்கிறது. வேகமாக வண்டி செல்லும் போதும், மெதுவாகச் செல்லும்போதும் அதன் அதிர்வுகள் வேறுபடும்.
சரியான வேகத்தில் வண்டி சென்றால் மட்டுமே இசை சரியான தாளத்தில் கேட்கும். அதை எப்படித் தெரிந்து கொள்வது என்று குழப்பம் வேண்டாம். அதையும் தேடிவிட்டேன். 60 கிமீ வேகத்தில் சென்றால், சரியாகக் கேட்கும். சிறிது வேகத்தைக் குறைத்தாலும், தாழ்ந்து ஒலியில் சன்னமாகக் கேட்கும். அதிக வேகம் என்றால் சத்தம் கூடுதலாக இருக்கும்.
மற்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இசைச் சாலை அமைக்கத் திட்டமிட்டால் இசைஞானியின் இசையிலிருந்து ஆரம்பிப்போம்.
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







