05 May பள்ளிப் பருவத்தில் மார்க்ஸ் எழுதிய கட்டுரை.
ஆரம்பப் படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் ட்ரியரிலிருந்து உயர் தரப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு. சரியாக ஐந்து வருஷ காலம் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான். லத்தீன், ஜெர்மன்,கிரீக்,பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றான். இவனுடைய கவிதா சக்தியும் வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் இவனுடைய மனமும் பண்பாடு பெற்று வந்தது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கை இன்னபடி தான் இருக்க வேண்டும் என்பதை இவன் இந்தக் காலத்தில் நிர்ணயம் செய்து கொண்டுவிட்டான் எப்படியென்றால்,கடைசி வருஷப் பரீட்சையின் போது, இவனுடைய வினாப்பத்திரம் ஒன்றில், ‘ ஓர் இளைஞன் ஏதேனும் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு முந்தி அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை இவன் மிக அழகாக எழுதினான். அதில் பொதிந்துள்ள நுட்பமான,கருத்துக்களைக் கண்டு இவனுடைய ஆசிரியர்கள் பிரமித்துப் போனார்கள். வருங்காலத்தில் இவன் மற்றவர்களுக்கு வழிக்காடியாயிருப்பாநென்ன்ன்று மனதில் தீர்மானித்துக் கொண்டார்கள்.மனதினால் ஆசீர்வாதமும் செய்தார்கள். அந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் மார்க்ஸ் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தான்.
நாம் எந்தத் தொழிலுக்குத் தகுதியுடையவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்தத் தொழில் நாம் அநேகமாகப் பிரவேசிக்க முடியாமலிருக்கலாம். ஏனென்றால் நமக்கு சமுதாயத்திற்கும் எந்த விதமான சம்பந்தம் இருக்க வேண்டுமென்று நாம் நிர்ணயிப்பதற்கு முந்தியே, அந்தச் சம்பந்தம் உருவாக்கப்பட்டு விட்டிருக்கிறது.
பொதுவாக மானிட சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்யக் கூடிய ஒரு தொழிலை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுவோமானால் உலக வாழ்க்கை நமக்கொரு சுமையிராது. அந்தச் சுமையின் கீழ் நாம் அழுந்திப் போக மாட்டோம். ஏனென்றால் நாம் சுமக்கிற அந்தச் சுமை எல்லோருடைய நன்மைக்காகவும் நாம் செய்கிற தியாகம்.
எவனொருவன் பெரும்பாலோருக்குச் சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறானோ அவன் தான் அதிகமான சந்தோஷத்தையடைகிறான் என்று உலக அனுபவம் கூறுகிறது. மானுட சமுதாயத்தின் நன்மைக்காக ஒவ்வொருவனும் தன்னைத் தியாகம் செய்துகொள்ள வேண்டுமென்ற லட்சியத்தையே மதம் நமக்குப் போதிக்கிறது.
தேசபக்தி காரணமாகப் பிரஷ்டம் செய்யப்பட்டு, டிரியர் போன்ற எல்லைப்புற பிரதேசங்களில் அப்பொழுது வாசித்துக் கொண்டிருந்த பல நாட்டு அறிஞர்கள் மத்தியில் மட்டும் இந்த மாதிரியான உயர்ந்த எண்ணங்கள் உலவிக் கொண்டிருந்தன. இவர்கள் தங்களை அண்டி வரும் இளைஞர்களுக்குத் ‘ தியாகம் செய்ய சித்தமாயிரு உலக நன்மைக்காக உன்னுடைய சுகத்தைத் துறந்துவிடு’ என்பன போன்ற உபதேசங்களைச் செய்து வந்தார்கள். இந்த உபதேசங்களுக்கு எதிரொலி கொடுப்பது போலவே மார்க்ஸின் மேற்படி கட்டுரை இருந்தது.
புத்தகம் :கார்ல்மார்க்ஸ்
எழுத்தாளர்: வெ. சாமிநாத சர்மா
Sorry, the comment form is closed at this time.