Skip to content
Blog

என் சாக்லேட் புராணம்

June 5, 20250 second read

என் சிறு வயது முதல் அப்பா துபாயில் வசித்து வருகிறர். ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுமுறைக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன். இது என் திருமணம் வரை தொடர்ந்தது. ஒன்றரை வருடங்கள் கூட அப்பாவைப் பார்க்காமலிருந்த காலமும் உண்டு. என்னால் தாள முடியாத ஏக்கம் அது. அப்பா துபாயிலிருந்து வந்துவிட்டால் போதும். நான் இளவரசி ஆகிவிடுவேன். என் நாள்கள் சொர்க்கமாகிவிடும். ஒரு வருடத்திற்கான சாக்லேட்டை ஓரிரு மாதத்தில் சாப்பிட்டு முடிப்பேன். அப்பாவின் அருகாமை தந்த மகிழ்ச்சியோடு பின்னிப் பிணைந்ததுதான் சாக்லேட்டும் பொம்மையும். திருமணம் முடிந்து, அப்பா அருகில் இருப்பேன் என்ற எண்ணமும், சம்மதம் சொன்னதற்குக் காரணம். சாக்லேட்டும் பொம்மைகளும் எப்போதும் எந்த வயதிலும் என் மனத்திற்கு நெருக்கமாகவே இருக்கும்.

என்னைத் தெரிந்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரியும். இனிப்பு என்றால் எனக்கு, டார்க் லிண்ட் சாக்லேட் மட்டும் தான். வேறு எந்தச் சுவையும் பிடிக்காது. பெரிய ஸைஸ், சின்ன சைஸ் எதுவாக இருந்தாலும் சில மணி நேரங்கள் போதும். முடித்து விடுவேன்.

இரண்டு நாள்களுக்கு முன், ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தேடிய போது, லிண்ட் பெரிய ஸைஸ் மட்டும் இருந்தது. வேண்டாம் சின்னதாக வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கண்ணில் அதைவிட பாதி விலையிலும் பாதி அளவிலும் இருந்த ஒரு சாக்கோட்டை ஆர்டர் செய்தேன். அந்த டப்பாவிற்குள் இரண்டு சாக்லேட் உருண்டைகள் இருந்தன. லிண்டை மனம் நிரம்ப சாப்பிட்டு முடித்தவளுக்கு, இந்த இரண்டு உருண்டைகள் எம்மாத்திரம். ஏமாற்றமாக இருந்தது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாயில் போட்டேன். இனிப்புச் சுவை, கசப்புக்குக் கீழ் மிதமான அளவில் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தேன். நாக்கில் முதலில் கசப்பு பட்டது, அது நாக்கின் சுவை மொட்டுகளில் முழுதாக பரவுவதற்குள், கொஞ்சம் இனிப்பும் சேர்ந்து கொண்டது. ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். மனம் நிறைந்தது. இன்னொரு சாக்லேட்டை சாப்பிட அவசியம இல்லாமல் போனது. நேற்று சாரா எனக்காக லிண்ட் வாங்கி வந்தாள். சிறு துண்டை எடுத்து வாயிலிட்டேன். அதீத இனிப்பாக இருந்தது. சாராவிடமே கொடுத்துவிட்டேன். இனி லிண்ட் சாப்பிடுவேனா என்று சந்தேகம் தான்.


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading