12 Dec மணல் பூத்த காடு – முஹம்மது யூசுப்
#மணல்_பூத்த_காடு
முஹம்மது யூசுப்
நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது.
இது நாவலா? பல கதைகளின் தொடரா?
பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் “ஆம்” என்ற பதிலை வாசகன் தர எழுத்தாளர் எடுத்த புதிய வடிவமைப்பு இந்த நாவல்.
ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்ற நபிகள் நாயகத்தின் மொழியை முன்னுரையில் வைத்து நாவல் தொடர்கிறது.
வேர் பதியாத சொந்த மண்ணிலிருந்து உருவி வளைகுடா சென்று வேர் பிடித்தும் பிடிக்காமல் வாழும் பலரோடு பிரதிபலிப்பாக “அனீஸ்” என்ற கதாபாத்திரம் மூலம் நாவல் நகர்கின்றது.
நாவல் முழுக்க ரியாத்தில் இருந்து பல மைல்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வது சுவாரசியத்திற்குச் சிறிது தடையாக இருந்தாலும் அதனூடே கிடைக்கும் அனுபவங்கள் மிகச் சுவாரசியமாக இருக்கின்றது.
கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டுச் சென்ற அனீஸ் வேலை நிமித்தமாக எடுக்கும் பயணங்கள், அனுபவங்கள் என்று கதை சொல்வதோடு மட்டுமில்லாமல், அரேபியா மண்ணுக்குப் பின் இருக்கும் சர்வதேச அரசியல், உண்மையான நிகழ்வுகள் என்று தொடர்ந்து அந்த நிலப்பரப்பைப் பற்றிய பல வரலாறுகள் வந்து கொண்டே இருக்கின்றது.
இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற வார்த்தைக்குப் பின் இருக்கும் பல முடிச்சுகளை நமக்காக எழுத்தாளர் முடிந்தவரை அவிழ்க்க முயற்சி செய்துள்ளார்.
அனீஸுக்கு கிட்டியது போல் பயண அனுபவங்கள் அனைவருக்கும் கிட்டுமா என்று தெரியவில்லை. அப்படிக் கிடைத்த பயணங்களைத் தேடலாக மாற்றும் ஆர்வம் இருப்பது அரிது. அப்படியான ஏக்கங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது.
வஹாபிசத்திற்கு பின் இருக்கும் தெரியாத, தெரிய வேண்டாம் என்றிருக்கும் பலவற்றைத் தெரியப்படுத்த தன்னால் முடிந்தவரை எழுதித் தீர்த்து விட்டார்.
வெறும் புனைவு என்று இல்லாமல் இவர் பெரும் உழைப்பை புதிய வடிவில் தந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
Sorry, the comment form is closed at this time.