ஒரு புத்தக வேலை முடித்தால் அதைக் கொண்டாட இன்னொரு புத்தகம் எழுதத் தயாராக வேண்டும் என்று ஆசிரியர் பா.ரா கூறுவார். அப்படித்தான் கடந்த மூன்று வருடங்கள் செய்தேன். “தளிர்” முடித்து “சூஃபி ஆகும் கலை”. “பொன் விளைந்த பூமி” முடித்து “பெண்ணால் முடியும்”. “சக்ஸஸ் ஃபார்முலா” எழுதி முடித்து “தோற்றாலும் விடமாட்டேன்”. ஆனால் இம்முறை அது சாத்தியப்படவில்லை. ஹிந்துவில் “உயிரினங்களின் மொழி” யை எழுதிக் கொண்டிருக்கும்போதே “கொழுகொழு”வை முடித்தேன். அதற்குப் பிறகு ஒரு நாவல். கடந்த மாதம் அதை எடிட் செய்து முடித்தேன். ஆனால் நாவல் என்னை விட்டு அகலவில்லை. அவ்வப்போது மீண்டும் படித்துச் சரிப் பார்த்தேன். அதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. பேஸ்புக், வாட்ஸப் எதிலும் இல்லை. அது ஒரு விஷயம் அல்ல. ஒரு மாதம் எதையும் எழுதவும் இல்லை வாசிக்கவும் இல்லை.
மீண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் எழுத ஆரம்பித்தேன். கை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுபோவது போல் இருந்தது. ஒரு நாள் இருநாள் இல்லை. ஒரு வாரம் அதே நிலை. எழுத்து வராமல் போய்விடுமோ என்று பதறினேன். “பதறினால் எல்லாம் கெடும். நிதானம் முக்கியம்”, என்று ஆசிரியரின் வார்த்தைகள் கேட்டன. சுற்றி முற்றிப் பார்த்தேன். யாருமில்லை. நான் சேகரித்த வார்த்தைகள் எனக்கு வழிகாட்டின.
ஒவ்வொரு நாளும் அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து ஒரு கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன முயற்சிகள் பயன் அளித்தன.
தவறாக எழுதிவிடுவேனோ என்ற பயம் தயக்கத்தைத் தந்தது. சட்டென்று “பால்கனி” தொடர் வார நாள்களில் வாட்ஸப் சேனலில் வெளிவரும் என்று அறிவித்தேன். இது எனக்கு நானே வைத்துக் கொண்ட சவால். ஏழு நாள்கள் கடந்துவிட்டன. எழுத வந்துவிட்டது என்பது ஆசுவாசமாக இருக்கிறது. இனி ஒவ்வொருநாளும் இரண்டு வார்த்தையாவது எழுதிவிட வேண்டும். கதை,கட்டுரை இல்லாவிட்டாலும் பரவாயில்லை “அன்பே சிவம்” என்று எழுதிவிட வேண்டும்.
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







