
08 Dec பொசல் – கவிதா
“ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி ” அடுத்த புத்தகம் எப்ப வரும்?…காத்துக் கொண்டு இருப்பேன்”.
பொசலில் இருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் விறுவிறுப்பாக அமானுஷ்யங்களோடும்,கிண்டல்,கேலி, உறவுகளின் உரசல்கள், துறு துறு பெண்ணின் விடுமுறைகள் என்று வாசகர்களை, முழுக்க தன்னுள் இழுத்துக் காதலோடு அணைத்துக் கொள்கிறது . சில இடங்களில் என் பால்ய நினைவுகளும், என் தாதி( அம்மாச்சி) சொன்ன அமானுஷ்யக் கதைகள் மீண்டும் மனதை அதே லேசான திகிளோடு கடந்தது. எனக்கும் கதைகளுக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகம் என்பதால், #பொசல் மனதின் மடியில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டது.
ஒவ்வொரு கதைகளிலும் துள்ளலும், அமானுஷ்யங்களும் எந்தக் கஞ்சத்தனமும் இல்லாமல் இருந்தது.
#விலகிப்போன_கடவுள்கள் என்ற சிறுகதையில் ” பக்தர் சொல்வதைக் கேட்கும் சாமிகளும், சாமிகளுக்கு கட்டளையிடும் பக்தர்களும் கிராமங்களில் மட்டுமே வாழ்கிறார்களோ” என்ற வரி அத்தனை உண்மையாக இருந்தது. நகர வாழ்க்கையில் தவறவிட்ட பலவற்றுள் ஊர் கடவுள்களும் அடங்கித் தான் போனது.
#யட்சி_ஆட்டம் என்ற சிறுகதையைய் வாசிக்க ஆரம்பித்த அந்த நொடி முதல் என்னைச் சுற்றி அரளிச் செடியின் கசப்பான வாசனையை நான் சுவாசிக்கும் காற்றில் கலந்ததை உணர்ந்தேன். அதுமட்டுமா “சுடலைக் கொண்டாடி” போன்ற மனிதர்கள் என்னை விழுங்கி விட்டார்கள் என்று தோன்றியது. இறுதியில் யட்சியைக் கண்டது உண்மை.
#பச்சை_பாம்புக்காரியை முடிக்கும் போது ஏனோ அந்த வழுவழுப்பு என் கைகளில் ஒட்டிக் கொண்டது. அதுவும் நல்லதுக்கே
கவிதாவின் எழுத்து, சுடலைமாடன், மோகினி, யட்சி,பகவதி, வனபேச்சி இவர்களை மீண்டும் சந்திக்க வைத்தது…பல நேரங்களில் சிலாகித்துப் போனேன். என் பாட்டி சொன்ன கதைகளும் கூடவே பயணித்தது இன்னும் சுவாரசியம். ஒரு முறை என்னை முனீஸ்வரன் மிரட்டிவிட்டான் என்ற கதைகளும்,அதே அமானுஷ்யங்களோடு ஆழ் மனதில் இருந்து மேலே வந்தது. ஆனால் கவிதாவின் படைப்புக்கு முன் அவன் கண் முன்னே காணாமலும் போய்விட்டான்.
மொழி மிக அழகாக, துறு துறு என்று இருந்தது…எழுத்தக்களினூடே ஒரு சுட்டிப் பெண் சுற்றிக் கொண்டே இருந்தாள்.
Sorry, the comment form is closed at this time.