ரமலான் மாதத்தில் கிடைத்த முத்தம். - Naseema Razak
16016
post-template-default,single,single-post,postid-16016,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

ரமலான் மாதத்தில் கிடைத்த முத்தம்.

பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அந்தக் கடையில் என்னையும் இன்னொரு பெண்ணையும் தவிர்த்து வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. அந்தப் பெண்மணி விக்ஸ் டப்பாவை கையில் வைத்து, கடைப் பயனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். கடைப் பையன் மலையாளி. அவனுக்கு அவர் கேட்பது புரியவில்லை. அவருக்கு அவன் பேசுவது புரியவில்லை.

அந்தம்மா வங்காள மொழியில் பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. சரியாகப் புரியாவிட்டாலும், விக்ஸ் டப்பாவை என் கையில் வாங்கினேன். மூக்கை உறிஞ்சுவது போல், தொண்டை வலிப்பது போல் சைகை செய்தேன். “ஓ…சொர்தி?” என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்த இடத்தில் வைத்தார்.

முதலில் தனது கழுத்தைத் தொட்டு ஏதோ சொன்னார். பிறகு முதுகு, இடுப்பு என்று எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் அவர் கை தானாகச் சென்றது. வங்காளமும் உடைந்த ஹிந்தியையும் சைகையையும் சேர்த்து என்னிடம் பேசினார். டைகர் பாம் எடுத்துக் கொடுத்தேன்.
“இது கொஞ்சம் எரியும் ஆனால் வலி குறையும்” என்றேன். அவருக்கு நான் சொன்னது புரிந்தது.”அச்சா..அச்சா….எரியும் மருந்து சீக்கிரம் குணமாக்கும் “ என்றார். பக்கத்தில் இருக்கும் ஓர் அரபி வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறார். காலை பத்து மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு எட்டு மணிக்குத் தான் அறைக்கு வர முடியும். இவர் பாஷை அரபிகளுக்குப் புரியவில்லை. இவருக்கும் அப்படியே. உடல் வலியும் இயலாமையும் அவர் கண்களில் தெரிந்தன.
சரி கிளம்பலாம் என்று பில் போடும் போது, பக்கத்தில் ஏதாவது மருந்துக் கடை இருக்கிறதா? என்று பார்த்தேன். ஒரு மாத்திரை வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது. ஆனால் வழியில்லை. பக்கத்தில் பெரிய கேக் கடை இருந்தது.

நோன்பு துறக்கும் நேரம் என்பதால், சுடச்சுட மட்டன் சமோசா, கட்லெட், பஜ்ஜி, பக்கோடா அது, இது என்று ஏகப்பட்ட நொறுக்குத் தீனி இருந்தது. அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். முதலில் வேண்டாம் என்று மறுத்தார். “என் ரூம்ல நாலு பேர் இருக்கோம்..வேண்டாம் மா” என்று அன்பாக என் கைகளைப் பிடித்தார். நான்கு பேருக்கு வேண்டியவற்றை வாங்கி அவரிடம் கொடுத்தேன். இருவரும் வெளியே வந்தோம். என் காரை நோக்கி நான் செல்ல வேண்டும். பஸ் ஸாட்டாப்பிற்கு அவர் போக வேண்டும்.

“உங்க பேர் என்ன?” என்று கேட்டார். “நஸீமா” என்றேன். அவர் கண்கள் சட்டென்று பிரகாசமாயின. “என் மூத்த மகள் பெயர் நஸீமா”. ஒரு நிமிடம் என்னை வாஞ்சையோடு பார்த்து விட்டு கட்டி அணைத்துக் கொண்டு என் நெற்றியில் முத்தம் கொடுத்தார். இதெல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. அவர் பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்றார். நான் அங்கேயே நின்றேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார். அவ்வப்போது அவர் கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டது.

அவர் பெயர் நூர். நூர் என்றால் ஒளி. அவர் வாழ்க்கையில் சீக்கிரம் நூர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

1 Comment
  • Vijayakumar
    Posted at 03:38h, 29 March Reply

    நெகிழ்வானகொரு நிகழ்வைப் பகிர்ந்துள்ளீர்கள்.. அந்த ஏழைப் பெண்ணிடமிருந்து அன்பான முத்தத்தைப் பரிசாகப் பெற்றுள்ளீர்கள். இதைவிடச் .சிறந்த ரம்லான் பரிசு வேறிருக்க முடியாது. நூரின் வாழ்வில் நூர் பிறக்கட்டும் என்ற வாழ்த்துதலுடன் பதிவு முடிகிறது..
    உங்களைப்போன்ற இளையோர் அழகு தமிழில் எழுதுவது. மனதுக்கு இதமாக உள்ளது. நசீம்மாவுக்கு இந்த அப்பாவின் வாழ்த்துகள்.
    தொடர்ந்து எழுது மகளே!
    வாசித்து மகிழ்வேன்.
    அன்புடன்,
    விஜயகுமார்,
    மதுரை.

Post A Comment