
05 Oct ஸ்டீபன் கிங்
எல்லாருக்கும் சரியான அம்மா அப்பா கிடைத்துவிடுவதில்லை. அவனுக்கும் அப்படி தான். இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அப்பா என்ற கதாபாத்திரம் ஓடிப் போனது. ஓடிப்போனவன் தெரிந்தோ தெரியாமலோ உருப்படியான வேலையைச் செய்திருந்தான். பெட்டி நிறைய ஃபேண்டஸி ஹாரர் புத்தகங்களை வீட்டில் வைத்துவிட்டுப் போனான்.
இரண்டு வயதுக் குழந்தைக்கு ஐந்து வயதானது. பொம்மை இல்லாத வீட்டில் அந்தப் பெட்டிதான் எல்லாம். புத்தகங்களோடு விளையாட ஆரம்பித்த குழந்தை நியாயமாகக் கிழித்து இருக்க வேண்டும். ஆனால் வாசித்து முடித்தது.
ஏழு வயதில் கதை எழுதத் தயாரானான். பன்னிரண்டு வயதில் பள்ளி மாத இதழ் ஒன்றில் அவன் கதையும் வெளிவந்தது. பேய் படம் பார்ப்பதும்,சைன்ஸ் பிக்சன் படங்கள் பார்க்கும் பழக்கமும் அவனோடு சேர்ந்து வளர்ந்தது. கல்லூரி படிப்பும் முடிந்தது.
ஆங்கிலத்தில் பட்டம். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டு திருமணம். பள்ளியில் ஆசிரியர் பணி .மூன்று குழந்தைகள் என்று சராசரி வாழ்க்கை. கிடைக்கும் சம்பளத்தில் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. எத்தனையோ பகுதி நேர வேலைகள் கைவசம் இருந்தன. ஆனால் எழுதுவதில் மனம் நின்றது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான பணம் கிடைத்தது. சிலர் பிரசுரம் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் மறைந்து போனார்கள். இன்னும் சிலர் பைசா இல்லை என்று பிரசுரமான பத்திரிக்கைகளைக் கூலியாகக் கொடுத்து அனுப்பினார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் எழுதுவதை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.
தொடர்ந்து செய்யும் எதற்கும் ஒரு சக்தி உண்டல்லவா? 1974 ஆம் ஆண்டு அவன் முதல் நாவல் வெளிவந்தது. அவன் எழுத்துகளில் வாசகர்கள் தொலைந்து போனார்கள்.
அவன் எழுதிய வரி ஒவ்வொன்றிலும் திகிலும் உளவியலும் கலந்திருந்தது. முதல் நாவல் பல மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ஆசிரியர் பணிக்கு முழுக்கு போட்டான். எழுத மட்டுமே செய்தான். ஒவ்வொரு நாளும் எழுதினான். வார இறுதி என்று விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை. வருடத்தில் இரண்டு மூன்று நாள்கள் மட்டும் எழுதவில்லை. அதுவும் அவன் பிறந்தநாள், கிறிஸ்துமஸ் என்று குடும்பஸ்தனாகச் செய்ய வேண்டியதாயிற்று.
தினமும் காலை உணவு முடித்துக் கொண்டு நேராக வாகிங். மூன்று மைல்கள் முடியவும் வீடு திரும்பவும் சரியாக இருக்கும். அவன் சிறிய ஆபிஸ் அறைக்குச் செல்பவன் நான்கு மணிநேரத்திற்கு அவன் கதாபாத்திரங்களோடு மட்டுமே. முதல் வேலை, எழுதியதை வாசித்துச் சரி பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரம் புதிதாக எழுத வேண்டும். பல நாள்களில் மூன்று வெவ்வேறு கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக எழுதும் வேலையும் இருக்கும். கையால் எழுதும் போது அவனுக்கு நிறைவாக இருக்கும். கணினி இருந்தாலும், எழுதப் போகும் ப்ளாட்டை கையால் எழுதுவது அவன் பழக்கம்.
ஆறுமாதத்தில் ஒரு புத்தகத்தின் முதல் முகம் தயாராகிவிடும். பத்து பன்னிரண்டு நாள்களுக்கு அந்த யோசனையே இல்லாமல் வேறு வேலையைப் பார்ப்பான். மீண்டும் முடித்ததை எடுத்துச் சரி செய்யும் பணி. இப்படி ஒரு புத்தகம் அச்சுக்குச் செல்லும் வரை வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஹாரார் கதைகள் என்றால் சிறுகதை வடிவில் இருக்க வேண்டும். ஆனால் இவன் எழுதிய ஹாரார் எல்லாம் மிகவும் நீண்ட நாவல்களாக வந்தன.
1999 ஆம் ஆண்டு அவனுடைய ஐம்பது இரண்டாவது வயதில் விபத்து நடந்தது. நடந்த விபத்தில் நுரையீரல், இடுப்பெலும்பு,கால் முறிவு என்று படுத்த படுக்கையாகி மீண்டு வந்தான். இப்பொழுதும் எழுதுவது நிற்கவில்லை. என்ன ஒரு வித்தியாசம் என்றால். இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதிய கைகளுக்கு இப்பொழுது ஆயிரம் எழுத வசதியாக இருக்கிறது.
“இருபது மணி நேரம் மற்றவர்களைப் போல் வாழ்கிறேன். ஆனால் அந்த நான்கு மணிநேரம் மட்டும் எனக்கானது என் எழுத்துக்கானது. அது என்னை இப்பொழுதும் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று தொலைக் காட்சி ஒன்றில் பேசும் போது சொல்லியிருக்கிறார்.
திரும்பும் இடமெல்லாம் அவர் வாசகர்கள். அவர் கொடுக்கும் திகிலிலும் ஃபேண்டசியிலும் மூழ்கிப் போகிறார்கள். ஒரே நேரத்தில் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் பட்டியலில் மூன்று நான்கு புத்தகங்கள் வருகின்றன. அவர் எழுதிய கதைகள் படங்கள் ஆக்கப்படுகின்றன. இன்றும் எழுத்து உலகின் ஹாரர் நாயகன் ஸ்டீபன் கிங் மட்டுமே.
Hamthoona J
Posted at 22:14h, 09 Octoberசிறப்பான பதிவு