
12 Oct சிட்னி ஷெல்டன்
1927 ஆம் ஆண்டு சிகாகோ நகரிலொரு பத்து வயதுச் சிறுவன் தான் எழுதிய கவிதைத் தாளோடு சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் சந்தோஷத்தின் குதூகலம். கவிதைத் தாளிற்குப் பதில் கையில் பத்து டாலர் இருந்தது. அவனுக்குக் கிடைத்த முதல் சம்பளம் அது.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தான். அதிகமாக நாடகக் குழுவில் வாய்ப்புகள் வந்தன.
தனது பதினேழாவது வயதில், பெரிய வாய்ப்புகளைத் தேடிச் சென்றவனுக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு. வாரத்திற்கு இருபத்திரண்டு டாலர் சம்பளத்தில் ஸ்க்ரிப்ட் ரீடராக வேலை கிடைத்தது. இரவு நேரங்களில் தன்னுடைய சொந்தத் திரைக் கதையை எழுத ஆரம்பித்தான். அதையும் இருநூற்று ஐம்பது டாலருக்கு விற்றான்.
வாலிபன் என்றால் இராணுவத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. நாடகம் எழுதிக் கொண்டிருந்தவர் இராணுவ பைலட்டாக வேலை செய்தார். இராணுவத்திலிருந்து வந்த பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.
தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், திரைக்கதை என்று அவர் வாழ்க்கை பரபரப்பாக இருந்தது. அவரது திரைத் திறமைக்கும் பல விருதுகள் வந்தன. திரைக் கதைகளை எழுதிக் கொண்டிருந்தவர் தயாரிப்பாளராகவும் மாறினார்.
1967 முதல் 1970 ஆம் ஆண்டு வரை ஐந்து சீசன் தொடர் ஒன்று வெற்றிகரமாகத் தொலைக்காட்சியில் வெளிவந்தது. அவரது உலகம் தொலைக்காட்சிகளில் விரிந்து கொண்டிருந்தது. 1969-ஆம் ஆண்டு நாவல்கள் எழுத வேண்டும் என்று முடிவு செய்தார். அப்பொழுது அவருக்கு வயது ஐம்பது. பல தொடர்கள் எழுதியவருக்கு எழுத்து பெரும் சவாலாக இருந்திருக்காது. ஆனால் நாவல் எழுத வேண்டும் என்றால் நேரத்தைச் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.
அவரது நாவல்களில் பெண்களை மிகவும் புத்திசாலியாக, அறிவாளியாக, சக்தி வாய்ந்தவர்களாக எழுதினார். அதற்காகவே அவர் நாவல்களுக்குப் பெண் வாசகர்கள் அதிகம்.
ஒரு வருடத்தில் இரண்டு புத்தகங்களை எழுத முடியும். ஆனால் அவர் ஒரு புத்தகத்தில் முழுதாக ஈடுபட்டார். ஒவ்வொரு அத்தியாயம் முடிக்கும் போதும் திடீர் திருப்பங்கள் இருக்கும். வாசகர்கள் தொடர்ந்து பக்கங்களைத் திருப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அவருடைய ஒரே குறிக்கோள், வாசகனை எந்த விதத்திலும் ஏமாற்றிவிடக் கூடாது. அதில் கவனமாக இருந்தார். அவரது பல நாவல்கள், பிரபல ஆங்கில எழுத்தாளர் டான் ப்ரவுனுக்கெல்லாம் ஊக்கமாக இருந்திருக்கிறது.
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் எழுத்து வேலை மாலை ஆறு மணிவரை செல்லும். சில நாள்கள் இரவு வரை. ஒவ்வொரு நாளும் அதே அட்டவணை தான். வார இறுதி என்று விடுமுறை எல்லாம் கிடையாது. மற்ற எழுத்தாளர்கள் போல் டைப்ரைட்டரோ, கணினியில் எழுதும் பழக்கம் கிடையாது.
ஒரு நாவலை எழுத உட்காரும் முன் கதை எப்படி முடிக்க வேண்டும் என்று எந்த முன் ஏற்பாடும் இருக்காது. ஒரு கதாபாத்திரம் அதன் ஒரு கல்யாண குணம் மட்டும் மனதில் தோன்றும்.
அவரது காரியதரிசியிடம் ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களைச் சொல்லிக் கொண்டு செல்வார். சில நாள் டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து வைப்பார்.
மறுநாள் தட்டச்சு செய்து முடித்த தாள்களைச் சரி பார்ப்பார். இப்படியே ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தாண்டும் வரை எழுத்து வேலை நடக்கும். முதல் பக்கத்திலிருந்து குறைந்தது பத்துப் பதினைந்து முறை படிப்பார். நூறு பக்கங்கள் தேவையில்லை என்றால், தயவுதாட்சண்யம் பாராமல் வெட்டப்படும். சில கதாபாத்திரங்களைத் தூக்கிவிட்டு புதுக் கதாபாத்திரங்கள் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடம் எழுதியதைச் சரி பார்ப்பார். அவர் மனதுக்குத் திருப்தி என்று தோன்றினால் மட்டுமே பதிப்பாளர் கையில் செல்லும். ஒரு நாவலுக்குப் பின் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை இந்த உழைப்பு இருக்கும்.
திரைத் துறையில் சாதித்ததைவிட நாவலாசிரியராக சிட்னி ஷெல்டன் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இன்று வரை அவர் எழுதிய ஒவ்வொரு படைப்பும் நியூயார்க் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இருக்கின்றது. அவர் மறைந்தபோது அவருக்கு வயது 89.
Sorry, the comment form is closed at this time.