03 Feb தளிர்- ராஜா ஹசனின் வாசிப்பு அனுபவம்
இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில்
மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர்.
‘நீல் & ஹீல்’ (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல்.
நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் ‘தளிர்’ .
இக்கதையின் நாயகி பர்வீன், கணவர் சலீம் இரண்டு பெண் குழந்தைகளுடன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
பர்வீனது புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள், சிறு சிறு அத்தியாயங்களாக நம் கண்முன் விரிகிறது. மணற் புயலில் ஆரம்பிக்கும் நாவல் , சிறப்பான அனுபவங்களுடன் தெளிந்த நீரோடை போல் செல்கிறது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உளவியல் மையம் சென்று, அங்கு வந்திருப்பவருக்கு ஆறுதல் கூறி கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லம் திரும்பி குடும்பப் பணிகளை கவனிக்கும் பர்வீன். தன் மன ஓட்டத்தில் எழும் சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்து வருகிறார்.
பரபரப்பான சம்பவங்களோ , திடுக்கிடும் திருப்பங்களோ இல்லாமல் நாவலின் களம் சலிப்பின்றி ,கதை சொல்லும் விதத்தில் நம்மை ஈர்த்து விடுகிறது.
வார இறுதி நாட்களில் கதை மாந்தர்கள் செல்லும் இடங்கள்(மம்ஜர் பீச், அல் ஸலாம் பாலைவன செயற்கை நீர் நிலைகள்,124மாடி புரூஜ் கலீஃபா, துபாய் மால்,கினோகுனிய, டிராகன் மார்ட்) காணும் காட்சிகள் நமக்கு புதிய அனுபவங்கள்.
‘தனது எண்ணங்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக கடத்துவதே சிறந்த எழுத்து’ – அதை ஆசிரியர் நஸீமா ரஸாக், கதையின் நாயகி பர்வீன் மூலமாக தெளிவாகவே நமக்கு கடத்தி இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் இளம் பருவத்தினர்.. விளைவாக பெற்றோருடன் ஏற்படும் பிரச்சனைகள், அதை எதிர்கொள்ளும் விதம் என இன்றைய சமூக நெருக்கடிகளுக்கான தீர்வாக ஆசிரியர் கூறும்,
“குழந்தைங்க ப்ரீ-டின் வயதுக்கு வரும்போது பெத்தவங்களும் கொஞ்சம் மாறணும் ..அவங்க நம்மகிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்றதுக்கு இடம் கொடுக்கணும்.. நான் என் மகள்களிடம் அப்படித்தான் பண்ணுகிறேன்” எனும் அறிவுரை அற்புதமானது.
யூ ட்யூப் பார்த்து, வீட்டு பாடங்கள் செய்யும் நிலையில் பாப்அப் ஆக வரும் ஆபாச வீடியோக்கள் குறித்த அத்தியாயம்.. அந்த குழந்தையின் ஹார்மோனல் வேதனைகள்.. விரசமின்றி கத்தி மேல் நடப்பது என்ற வார்த்தை க்ளிஷேவாக இருந்தாலும் தெளிவான கருத்துகள் சிறப்பு.
இன்றைய முதலாளித்துவ வணிகத்தில் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
அவ்வாறு துபாயில் வேலை இழந்து இன்னொரு வேலையில் சேர இயலாமல் கேரளா திரும்பும் நாயகியின் குடும்ப நண்பர்களின் துயரம்… இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை என்ற படிப்பினையைத் தருகிறது.
பூந்தளிர்கள் போன்று வளரும் குழந்தைகள், தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெற்றோரிடம் மனம் விட்டு சொல்லுதல் வேண்டும்.. பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்து நல்வழிப்படுத்த முற்பட வேண்டும் என்ற படிப்பினையை மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என்ற நம்மைப்படுத்தாமல் , அழகான சிறு சிறு சம்பவங்களுடன் சுவையாக மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது .
அடுத்த தலைமுறைக்கு படிப்பும், சத்தான உணவும் எப்படி முக்கியமோ, அப்படித்தான் குழந்தைகளின் உணர்வுகளும் எண்ணங்களும் செம்மையாக உருவாக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் உலகில் தளிரோடு தளிராக பெற்றோர்களாகிய நாமும் வாழ்ந்து நமக்கான அனுபவங்களையும் இந்த நாவலின் மூலம் பெறலாம் என்பது என் எண்ணம்.
அன்பன்,
ராஜா ஹஸன்.
Sorry, the comment form is closed at this time.