முதல் மயானப் பயணம் - Naseema Razak
15805
post-template-default,single,single-post,postid-15805,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

முதல் மயானப் பயணம்

பயணம் செய்யும்போது பல முறை மயானங்களைக் கடந்து இருக்கிறேன். ஒருவிதமான அச்சம்தான் அப்பொழுது இருந்தது. ஒரு வேளை அன்றைய வயது காரணமாக இருந்திருக்கலாம்.

சமீபத்தில் எங்கள் நெருங்கிய உறவினர் காலம் சென்றார். மிகச் சாந்தமான நல்ல மனிதர். அவ்வப்போது அவரை நினைத்துக்கொள்வதும் உண்டு. இன்றோடு நாற்பது நாள் முடிந்தது. அவர் சாந்தி கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ரஸாக் கிளம்ப, நானும் சேர்ந்துகொண்டேன்.

மயானத்திற்கு வெளியில், வண்டியில் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார். பழைய கார்களின் உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன. சிறிது நேரத்தில் திரும்பியவர், “பெண்களும் உள்ளே வரலாமாம்” என்று சொல்ல,மயானத்திற்குள் வண்டி சென்றது. எனது முதல் மயானப் பயணம்.

பார்வை படும் இடம் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் கல்லறைகள் தெரிந்தன. மனத்தில் ஒரு விதமான வெறுமை தொற்றிக் கொண்டது. இவர்கள் எல்லாம் வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுதலையாகி நிம்மதியாக உறங்குவதுபோல் தோன்றியது.

கல்லறைகள் சின்ன கருங்கற்களால் மூடப்பட்டு இருந்தன. சிலவற்றில் வெள்ளை நிற கூழாங்கற்கலும் சேர்த்துப் போடப்பட்டு இருந்தன. கூடுதலாகப்  பெயர், தோற்றம் ,மறைவு குறிப்பிட்டிருந்த பலகைகள் இருந்தன. அதிலும் ஒரே அளவிலான பெயர்ப் பலகைகள் எல்லா இடங்களிலும் தெரிந்தன. இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை.

வண்டி ஐந்து நிமிடம் உள்ளே பயணிக்க, எங்கள் உறவினரின் கல்லறை  வந்தது. என் தம்பிகள், நான், என் உறவினர்கள் என்று பெருங்கூட்டம் அங்குக்  கூடி இருந்தோம். அமைதியாக நின்று குர் ஆன் ஓத ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் பிரார்த்தித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். என் சின்ன தம்பி அங்கிருந்த தண்ணீர் வாலியை எடுத்து மற்ற கல்லறைகள் மேல் ஊற்றிக் கொண்டிருந்தான். வெயிலில் அந்த மண்ணை குளிரவைக்கவே அப்படிச் செய்ய ஆரம்பித்தான்.

எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, நானும் ஒரு பிளாலாஸ்டிக் வாளியை எடுத்துக் கொண்டேன். என் கண்களுக்கு அந்த வரிசை மட்டுமே தெரிந்தது. ஒரு நிமிடம் அங்கிருந்த யாரும் என் பார்வையில் இல்லை. சொல்ல முடியாத பதற்றம் எனக்குள் படர ஆரம்பித்தது.

நான் பார்த்த வரிசையில் கிட்டதட்ட இருபத்தைந்து முதல் முப்பது கல்லறைகள் இருந்தன.அந்தக்  கல்லறைகளின் அளவு  இரண்டடிக்கு மேல் இல்லை. எல்லாம் சின்னக் குழந்தைகளின் கல்லறைகள். சிலவற்றில் மறைவு சென்ற மாதம் என்று இருந்தது. மனத்தில் சொல்ல முடியாத பாரம்.  முடிந்தவரை மறைந்து போன அந்தச் சின்ன தேவதைகளின் மண்ணைக் குளிரவைக்க மட்டுமே முடிந்தது. மனத்தில் துக்கம், அமைதி, வெறுமை என்று எல்லாம் கலந்த உணர்வுகள். முதல் முறை பயமும் அச்சமும்  இல்லாமல் மயானத்திலிருந்து வெளியேறினேன். மேலும் சில குழிகள் நேர்த்தியாகத் தோண்டி வைக்கப்பட்டிருந்தன.

5 Comments
  • Shanavas
    Posted at 15:28h, 06 March

    அருமை

    இதையும் வாசியுங்கள்
    http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3798

    • Naseema Razak
      Posted at 03:38h, 07 March

      முகவரி மாறும் கல்லறைகள் படித்தேன். காட்சிகள் விரிந்தன. நன்றி

  • Uthay
    Posted at 01:05h, 07 March

    Deeep ❤️

  • பா.வேல் உபேந்திரன்
    Posted at 11:11h, 07 March

    #நஸீமா_ரஸாக்
    என்ற பெயர் எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் அறிமுகம்…

    இன்னும் சொல்லப்போனால், அவரது, “தளிர்” என்கிற புத்தகத்தை பற்றிப்பேசுவதற்காகவே, அவரை முகநூலில் தேடியடைந்தேன்.

    கடந்த மற்றும் இந்த வார நாட்களில் எனது முகநூல் பக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர், “வாசகர்கள்,கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்.”

    எல்லாம் இந்த #பொருநை_நெல்லை_புத்தகத்திருவிழா தந்த வரம்தான்..

    இன்று காலைதான் அவரோடு #தளிர் புத்தகத்தைப்பற்றி உரையாடினேன். பின் அவரின்,”முதல் மயானப் பயணம்” என்ற கட்டுரையை வாசித்தேன்..

    “இவர்கள் எல்லாம் வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுதலையாகி நிம்மதியாக உறங்குவதுபோல் தோன்றியது”

    என்ற வரிகளின் அழகியலால், மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட மரணங்கள் கண்முன் வந்துபோயின … ..

    கட்டுரையின் முடிவால், “கணக்கின்ற இதயத்தோடே” இப்பதிவை எழுதுகிறேன்…..

    ஆம்… அங்கே நேர்த்தியாக தோண்டி வைக்கப்பட்டிருக்கிற குழிகள் நமக்கானவைதான்….

    அதற்கு முன்பாக….

    வாழ்வோம்…

    அர்த்தமுள்ளதாக…. அடுத்தவர்களுக்காக…

    நன்றி,
    நஸீமா ரசாக்.

    பா.வேல் உபேந்திரன், திருநெல்வேலியிலிருந்து…..
    07/03/2023.