நஸீமாவும், 2022-ம் ஆண்டும் - Naseema Razak
Naseema Razak, நஸீமா, Remove te madras paper,Naseema Razak ,நஸீமா ரஸாக் ,மெட்ராஸ் பேப்பர்
15719
post-template-default,single,single-post,postid-15719,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive

நஸீமாவும், 2022-ம் ஆண்டும்

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது.

என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன், அரபி வகுப்பு என்று கிளைகள் விட்டு வளர்ந்து வந்தது. கோவிடில் வந்த ஆன்லைன் வகுப்புகள், சவாலாக இருந்தன. குழந்தைகளை மீண்டும் வகுப்புகளுக்கு அழைத்து வருதல் என்பது எளிதான விஷயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் கார் ஓட்டிக் கொண்டு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத்தான் விரும்பினார்கள். வேலையிலிருந்த ஆசிரியர்களும், கொஞ்சம் கொஞ்சமாக வேறு வழியைப் பார்த்துக் கொண்டார்கள். என்னைச் சுற்றி நடக்கும் நிச்சயமற்ற தன்மையிலிருந்து, எழுத்தும் வாசிப்பும்தான் என்னை மீட்டுக் கொண்டிருந்தது. எழுதி முடித்திருந்த ‘மராம்பு’ குறுநாவலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்ய ஆரம்பித்தேன்.

தொடர்ந்து வாகனம் ஓட்டுவதால் உடலும் சோர்ந்து போனது. அதற்குமேல் உடலை வருத்திக் கொள்ள மருத்துவர்கள் இன்னொரு வாய்ப்புத் தர மறுத்து விட்டார்கள். இன்னொருபுறம், ஆன்லைன் வகுப்புக்கு இடம் எதற்கு என்ற நியாயமான கேள்வி எழுந்தது. விளைவு… இடமும் சட்டென்று காணாமல் போனது. என் முதுகு வலி சரியாவதற்குக் காணாமல் போன வகுப்பறைகள் உதவின என்பது உண்மை. கெட்டதிலும் நல்லது நடந்தது என்று எடுத்துக் கொண்டேன். இதற்கிடையில் ‘மராம்பு’ எடிட் செய்யும் வேலை தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுது தான் ஸீரோ டிகிரி காயத்ரி, பா.ராகவன் நடத்தும் எழுத்து வகுப்புகளைப் பற்றிச் சொன்னார். வகுப்பில் சேரும் வாய்ப்பு அப்பொழுது அமையவில்லை. ‘யாவரும் பதிப்பகம்’ நண்பர் ஜெ.கே, “மராம்புவைக் கொண்டு வரலாம். ஆனால் இன்னும் பொறுமையாக வேலை செய்ய வேண்டும்” என்றார்.

நடப்பவற்றைத் தின்று செரிக்க, எழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

நடுநடுவே அலுவலகத்தில் குழந்தைகள் குறைய ஆரம்பித்தார்கள். மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். இருக்கும் குழந்தைகளை மற்ற ஆசிரியர்களுக்கு மாற்றி விட்டேன். எல்லாமே மெதுவாகத் தான் நடந்தது.

முரண்டு பிடிக்காதவரை வாழ்க்கை தானாக நம்மை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்ற புரிதல் இருந்தது. எழுத்தைச் சரியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை என்னைத் துரத்த ஆரம்பித்தது. அடுத்து எதையும் யோசிக்காமல் புக்பேட் வகுப்பு மாணவியாக மாறினேன். ஆங்கில எழுத்தாளர் பலருடைய காணொளிகளைப் பார்ப்பதுண்டு. எழுத்தைப் பற்றி அவர்கள் பேசும் போது, ‘இப்படித் தமிழில் இல்லையே’ என்று எழுகிற வருத்தத்தை புக்பேட் தீர்த்து வைத்தது. வகுப்பு முடிந்த கையோடு பா.ரா சார் முகநூலில் ஒரு அறிவிப்பைச் செய்தார். நாவல் எழுத விரும்புபவர்கள் சினாப்ஸிஸ் அனுப்ப வேண்டும் என்று இருந்தது.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆசையாக ஆரம்பித்த நிறுவனம், சட்டென்று இல்லாமல் போன இடத்தை நிரப்ப வேறென்ன வேண்டும்..?

பிரைனோ கிட் வந்த ஒவ்வொரு குழந்தையும் என் வாழ்க்கையின் ஆசீர்வாதம். அதை இன்றுவரை நான் முழுதாக நம்புகிறேன். குழந்தைகள் உலகத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை எழுத முடிவு செய்தேன். அப்பொழுது தான் ஆசிரியரிடம் இருந்து ஒரு சவால் வந்தது.

முப்பத்தி இரண்டாயிரம் வார்த்தைகளில் எழுத வேண்டும். அதுவும் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். அப்படி முடித்தால், நாவலை அவர் வாசித்து, விமர்சனம் சொல்லுவார் என்று சொன்னார். நாம் எழுதிய புத்தகத்தை, கற்றுத் தந்த ஆசிரியரே படித்து மதிப்பிடுவார் என்பது என்னை உற்சாகப்படுத்தியது.

குறுநாவலை எழுதிக் கொண்டிருந்த நான் சட்டென்று நாவலை எப்படி ஆரம்பிப்பது..? கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. மூன்று மாதம் ஒரு ஆர்மி ஆபிசரைப் போல் மாறினேன். என் ஒவ்வொரு நாளிலும் நானே அதிசயிக்கும்படி ஒழுங்கு வர ஆரம்பித்தது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஆயிரம் வார்த்தைகள் என்று இலக்குடன் பயணித்தேன். எழுத்து ஒரு தவமாக மாறிய தருணத்தை உணர்ந்தேன். சொன்ன தேதிக்கு, மூன்று நாட்களுக்கு முன் முடித்து அனுப்பினேன். எப்படி எழுதி முடித்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு முழுமையை உணர்ந்தேன். ஆசிரியரும் என் உழைப்பைப் பார்த்து மகிழ்ந்தார். அது மட்டும் இல்லை, என் எழுத்துப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமானது.

மெட்ராஸ் பேப்பருக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுத வைத்தார். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு அனுபவம். துபாய் குறுக்குச் சந்தில் ஆரம்பித்து ஒட்டகம், பாலைவனத்தில் விவசாயம், என்று இன்று வரை எழுதும் கட்டுரைகள் மூலம் யாருக்கும் கிடைக்காத அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டேன்.

இதற்கிடையில் ஷார்ஜா சர்வதேச புத்தக் கண்காட்சியில், என் அம்மாவின் கைகளால் ‘மராம்பு’ குறுநாவல் வெளியிடப்பட்டது.

“பொழுதுபோக்கு எல்லாம் சோறு போடாது. எம்சிஏ பிராஜெக்ட்ல கோல்டு மெடல், கார்ப்பரேட்ல அனுபவம், சொந்த நிறுவனம் என்று அடர்த்தியான அனுபவங்கள் இருக்கு. எழுத்து எல்லாம் சைடுல வச்சிக்கோ” என்று அவ்வப்போது தோழிகளிடம் இருந்து கொஞ்சம் கிண்டலும் கண்டிப்பும் வரும்.

அதெல்லாம் சரி தான். “பிடித்த விஷயத்தைச் செய்கிற வாய்ப்பு உனக்குக் கிடைத்து இருக்கு. நீ எழுது“ என்று ரசாக் சொல்வது வாடிக்கையாகிப் போனது.

அதுதான் என் எழுத்தைத் தொடர உற்சாகம் அளித்தது. மற்ற எல்லாவற்றையும் வேலையாகச் செய்தேன். எழுத்தில் வாழ ஆரம்பித்தவளிடம், இனி யார் என்ன சொன்னாலும் காதில் விழப் போவதில்லை.

ஆறு மாதத்தில் ‘மெட்ராஸ் பேப்பர்’ உதவி ஆசிரியராக அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. சென்னைப் புத்தகக் காட்சியில் இரண்டு புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும் மூன்று புத்தகங்கள் என்பது கடந்து வந்த கரடுமுரடான பாதையைக் காணாமல் செய்துவிட்டது.
2022-ம் ஆண்டு நிறையக் கற்றல்களோடு முடிந்திருக்கிறது. மலரவிருக்கும் 2023-ம் ஆண்டை மிக நிச்சயமாக பெரும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள இருக்கிறேன்.

2 Comments
  • NOOR fathima NOOR mohamed
    Posted at 12:57h, 01 January

    Inspiring Naseema akka

  • Mohamed Haroon
    Posted at 07:56h, 03 January

    முதல் காலடி எடுத்து வைச்சாச்சு! வாழ்த்துகள்1 ஒவ்வொரு எழுத்தும் உள்ளத்தை தொட்டு நாமே காண்பதைப்போல் உணர்த்திடும் வகையில் இலகுவான நடை உங்கள் நடை, பாலை வனத்தின் நடுவே ஒரு மலர் வனம் குளிர் நீருடன். இனிய நல் வாழ்த்துகள்!