இயன் ஃப்ளெமிங் - Naseema Razak
15976
post-template-default,single,single-post,postid-15976,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive

இயன் ஃப்ளெமிங்

சிலருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் இடம் மாற்றம் தேவை. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது சொகுசாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தேவையாக இருக்கும். முக்கியமாகப் படைப்புச் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களிடம் இந்த குணத்தை பார்க்கலாம். மாடமாளிகை இல்லை என்றாலும் ஒரு மாற்றம், ஒரு தனிமை. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் தன் இலக்குக்காக ஜமாய்க்கா என்ற நகரில் ஒரு மாளிகையைக் கட்டினார். நானோ நீங்களோ அதே இலக்குக்குப் பின் சென்றால் அதற்காக ஒரு அறை கட்டுவோமா என்பது சந்தேகம்..ஆனால் ஃப்ளெமிங் அதிர்ஷ்டசாலி.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் கடற்படையின் முக்கிய அதிகாரியாக இருந்த இயன் ஃப்ளெமிங் போர் ஆபரேஷன் பலவற்றில் வேலை செய்துள்ளார். அதில் ஒன்று கோல்டன் ஐ. தான் ஆசையாகக் கட்டிய மாளிகைக்கும் கோல்டன் ஐ என்று பெயர் வைத்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன் அவருக்கு நாவல் எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்தது. ஜனவரி மாதம் ஜமாய்க்காவில் இருக்கும் கோல்டன் ஐ க்குச் சென்று இரண்டு மாதங்கள் தங்கினார். போரில் களைத்து இருந்தவர் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். ஃப்ளெமிங் ஓய்வும் எடுத்து எழுதவும் ஆரம்பித்தார். இரண்டு மாதத்திற்குள் நாவல் முடிந்தது. அதுதான் இன்றும் நாம் கொண்டாடும் விறுவிறுப்பான ஜேம்ஸ்பாண்ட் 007 ஏஜண்ட் கதை. 1953-ஆம் ஆண்டு முதல் நாவல் தி கேஸினோ ராயல் வெளிவந்தது. பல ஆயிரம் பிரதிகளும் விற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிப்ரவரி மாதங்கள் அவர் எழுத்துக்கான மாதங்களாக மாறின.

அவரது வாழ்நாளின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளில் பதினான்கு நாவல்கள் வெளிவந்தன. எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ். ஒவ்வொரு நாவலிலும் சுவாரஸ்யம், காதல், துப்புரவு என்று வாசகனுக்குக் குறைவில்லாமல் இருந்தது. ஆயிரம் அல்ல அவர் இருக்கும் போதே பல நூறு மில்லியன் பிரதிகள் வி̀ற்றுத் தீர்ந்தன. 1953-ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தவர் 1964- ஆம் ஆண்டு வரை எழுதினார். அவர் மறைவுக்குப் பின்னும் இரண்டு நாவல்கள் வெளிவந்தன.

அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அவருடைய ஜேம்ஸ்பாண்ட் சக்கை போடு போடுகிறது. அவர் அதை எப்படிச் சாத்தியப்படுத்தினார் என்றால் செய்யும் வேலையில் ஒழுக்கம் இருந்தது.

கோல்டன் ஐ சென்ற இயன் ஃப்ளெமிங் பன்னிரண்டு வருடம் எழுதுவதில் ஒரே மாதிரியான ஒழுங்கைக் கடைப்பிடித்தார். அவர் காலை எழுந்தவுடன் நீச்சல் செல்வது வழக்கம். சாவகாசமாக மனைவி ஆன் சமைத்துக் கொடுக்கும் முட்டை மற்றும் பிரெட் டோஸ்ட்டை ரசித்து சாப்ப்பிட்டுவிட்டு, நாளிதழ் படிப்பார். அதற்குப் பின் எழுத்து அறை. ஒன்பதரைக்கு உள்ளே சென்றால் பன்னிரண்டரைக்குத் தான் வெளியே வருவார். தன் டைப்ரைட்டரை எடுத்து மேஜையில் வைத்துத் தொடர்ந்து எழுதுவார். எழுதும் போது சரிபார்த்துக் கொள்வது, வாக்கியங்களைச் சரி செய்வது, பிழை திருத்துவது என்று எதுவும் அப்பொழுது இருக்காது. மூன்று மணிநேரத்திற்கு மடை திறந்து வரும் நதி போல் வார்த்தைகள் அவர் விரல்களிலிருந்து வந்து கொண்டிருந்தன. அது நிற்க வேண்டும் என்றால் பன்னிரண்டரை ஆக வேண்டும்.

அறையை விட்டு வெளியே வந்துவிட்டால் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் காணாமல் போய்விடுவார். அப்பொழுது அவர் கண்களுக்கு மனைவி ஆன் மட்டும் தான் தெரிவார். மதியம் உணவு, மீண்டும் கடலில் சன் பாத். பின்பு சின்ன உறக்கம். மாலை ஆறு மணிக்கு மீண்டும் எழுதத் தொடங்குவார். அதிகம் இல்லை. ஒரு மணிநேரம் மாத்திரமே. அவர் கணக்கு ஒரு நாளில் இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதியாக வேண்டும். இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த அட்டவணை. அதுவரை கோல்டன் ஐ வாசம். நாவலும் முடிந்துவிடும். இறுதியாக எழுதியவற்றைச் சரிபார்க்கும் வேலை. எல்லாம் முடித்துவிட்ட பின் மனைவி ஆன் படிப்பார், பின்பு பதிப்பாளர் கையில் ஜேம்ஸ்பாண்ட் சென்றுவிடுவார். பதினான்கு நாவலை எழுதும் பொழுதும் எந்த மாற்றமும் இல்லாமல் இதே ஒழுங்குடன் வேலை செய்துள்ளார். சின்ன இலக்கோ பெரியா இலட்சியமோ அதில் வெற்றி பெறத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஃப்ளெமிங் வெற்றியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கோல்டன் ஐ மாளிகை இன்று ரிஸார்ட்டாக மாறியுள்ளது. அவர் எழுத உபயோகித்த அறை, மேஜை அப்படியே தான் இருக்கிறது. ஜமாய்க்கா போகும் யாரும் அவர் அறையில் தங்கிவிட்டு வரலாம். முடிந்தால் இரண்டு வார்த்தையும் அங்கு உட்கார்ந்து எழுதலாம்.

No Comments

Sorry, the comment form is closed at this time.