24 Sep ஹெமிங்வே
திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை.
அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர் குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது.
அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.
பதினெட்டு வயதாகும் போது வீட்டிலிருந்து தப்பிக்கச் சரியான வழியைக் கண்டுபிடித்தார். அந்தக் காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு போரிடத் தயாராகிக் கொண்டிருந்தது.
தன் நாட்டுக்காகப் போரிட வேண்டும் என்று கிளம்பிச் சென்றவருக்கு ஏமாற்றம். கண் பார்வை சரியில்லை என்று நிராகரித்தார்கள். எப்படியாவது நாட்டுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடிப்பட்ட போர் வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறினார்.
அப்படியொரு நாள் போர் வீரனை அழைத்துச் செல்லும் போது அவருக்கும் குண்டடிப்பட்டது. அதற்கெல்லாம் அவர் அசரவில்லை. அடிப்பட்டவனைத் தோளில் தூக்கிக் கொண்டு, குண்டடிபட்ட காலை இழுத்துக் கொண்டு மருத்துவமனையின் கூடாரத்தை அடைந்தார். இது போதாதா வீரன் என்று சொல்ல?போரிலிருந்து வீடு திரும்பியவரை பாராட்டினார்கள்.
யாரென்ன பாராட்டினாலும் மனதிற்குள் எழுத வேண்டும் என்ற ஆசை. பதினெட்டு வயதில் போரில் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளின் நீட்சியாக நாவலை முடித்தார். அதையடுத்து டொரொண்டோ பத்திரிக்கைக்கு எழுத ஆரம்பித்தார். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை எழுதும் போர் நிருபராக பல ஆண்டுகள் இருந்தார். அப்பொழுதும் வேட்டைக்குச் செல்லும் பழக்கம் இருந்தது. எழுதுவது தான் வேலை என்றாலும் பிடித்த புனைவை எழுத வேண்டும் என்று மனம் படுத்தியது. மீண்டும் நாவல்களை எழுத ஆரம்பித்தார். நீங்கள் நினைப்பது போல் அது அத்தனை எளிய காரியமில்லை. கடன் வாங்கி வீடு கட்டிவிடலாம், ஏன் கல்யாணம் கூட முடித்துவிடலாம். வாழ்க்கையில் அதற்கான ஒழுங்கு இருந்தால் மட்டுமே நாவல் சாத்தியம். காலை ஐந்து மணிக்கு எழுந்தவுடன் முதல் வேலையாகப் பேனா பேப்பர் கையில் இருக்கும். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. எழுத ஆரம்பிக்கும் முதல் முடிக்கும் வரை அவர் நின்று கொண்டுதான் இருப்பார். அவர் எண்ணம் எல்லாம் வாக்கியங்களாக மனதில் வரிசையாக நின்று கொண்டிருப்பதாகத் தோன்றும். அதை எழுதுவார். எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே எழுதுவார். மதியம் வரை எழுதுவது தொடரும். சில நாள் மாலை வரை. அவர் எழுதி முடிக்கும் வரை ரகசியமாக வைத்துக் கொள்வார். எழுதும் போது முடிக்க வேண்டும் என்று எழுதியதில்லை. தோன்றும் வரை எழுத வேண்டும். முக்கியமாக அடுத்து என்ன நடக்கும் என்று அவர் மனதுக்குத் தெரியும் நிலையில் முடிப்பார். அப்படி முடிப்பதால் அடுத்த நாள் எந்தத் தடையும் இல்லாமல் ஆரம்பிக்க முடியும் என்பது அவர் எண்ணம், இதைத் தான் பல எழுத்தாளர்களுக்குச் சொல்லியும் கொடுத்துள்ளார். வசதிகளோடு பிறந்த ஹெமிங்வே வாழ்க்கையில் ஏழ்மை நிலையும் வந்தது சென்றது. உறவுகளில் சிக்கல்கள் இருந்து கொண்டே இருந்தன. அதற்குச் சாட்சியாக நான்கு திருமணங்கள், மூன்று விவாகரத்து நடந்தன. ஆனால் இவை எதுவும் அவர் நாவல் எழுதும் நேரத்திற்குத் தடையாக விடவில்லை, அவர் விட்டதில்லை. அவர் எழுதிய ஒவ்வொரு நாவலிலும் சிறுகதைகளிலும் அவர் வாழ்க்கையின் அனுபவங்கள் இருந்தன. 1952 ஆம் ஆண்டு வெளிவந்த கிழவனும் கடலும் என்ற நாவலுக்கு புல்ட்சர் விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு நோபல் பரிசும் பெற்றார். 1954 ஆம் ஆண்டு விமான விபத்து, நோய் என்று அவர் இறுதி நாள்கள் துயரமானது. 1961 ஆம் ஆண்டு எல்லாவற்றிலும் இருந்து விடுபடச் சுட்டுக் கொண்டார். அவர் இறந்த பின்னும் வெளிவராத அவரது பல படைப்புகள் வெளிவந்தன. வாழ்க்கையின் அடர்த்தியை வாழும் போதும் இறக்கும் போது அனுபவித்த எழுத்தாளர் பட்டியலில் ஹெமிங்வேக்கு முதலிடம் கொடுக்கலாம்.இன்றும் இலக்கிய உலகில் அவர் எழுத்துக்கள் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆசானாக இருக்கிறது. என்றும் இருக்கும்.
Sivamani
Posted at 02:49h, 26 Septemberநீங்களே எங்கள் ஆசான் தானே
Dr Thavamani Jagannathan
Posted at 07:12h, 26 SeptemberWonderful writing Naseema, I am your great Admirer. How you balance your family and your profession and help so many people
இராஜதிலகம் பாலாஜி
Posted at 14:23h, 27 Septemberஹெமிங்கவே அவர்களை பற்றிய தகவல் அருமையாக இருந்தது மேடம்.இதுவரை அவரைப் பற்றி தெரியாத தகவல் இன்று தெரியவந்ததில் மகிழ்ச்சி மேடம்.வாழ்த்துகள்💐💐💐